செவ்வாய், ஏப்ரல் 14, 2009

சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!


விரோதியே வருக‌
விமோச்சனம் தருக‌

பரிதவிக்கும் எம் மக்கள்
பாரங்கள் களைக‌

எரிதியாய் குரோதியாய்
எமை எரிக்கும் நிலை நீங்கி

சரி சமனாய் சமத்துவமாய்
சாதிக்கும் வரம் அருள்க‌

புத்தாண்டே துணை செய்க!
புதுஆண்டே துணை புரிக!


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

ஞாயிறு, ஏப்ரல் 12, 2009

சித்திரை புத்தாண்டுக்கு முந்திய சில கேள்விகள்...?(இது சரியா... இல்லை தவறா...?)

இன்னும் இரு தினங்களில் புது வருடம். தமிழ்-சிங்கள புதுவருடம்.உலகிலுள்ள அனைத்து தமிழர்களும் குறிப்பாக இலங்கையில் சிங்கள மக்களும் தமது புத்தாண்டை வரவேற்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இதேவேளை புதிதாக அனைத்து தமிழ் மக்களிடமும் எழுந்துள்ள ஒரு கேள்வி தமிழர்களுடைய புதுவருடம் தையிலா...? அல்லது சித்திரையிலா என்பது தான்? கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆரம்பித்து வைத்த இக் கேள்வியை இன்றைய பதிவர் கமல் வரை கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள்? இக் கேள்விக்கான பதிலை ஒரு சாரார் தையில் தான் தமிழர்களுடைய புது வருடம் கொண்டாடப் பட வேண்டுமென்றும் ஒரு சாரார் இல்லை இல்லை பழமையை என்றும் மாற்றுதல் ஆகாது சித்திரையில் தான் கொண்டாடப் பட வேண்டும் என்றும் தமது வாக்குகளை குத்திக் முகொண்டிருக்கும் இதே வேளை கத்துக்குட்டியாகிய நானும் (மன்னிச்சுக் கொள்ளுங்க) இதைப் பற்றிய எனது கருத்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம் என்று ஆவலாக உள்ளேன்...


முதலில் தை...தனித்திருத் திங்கள் தரணியில் தோன்ற‌
தைமகள் தான் அவதரிக்க‌
தமிழர் நாம் குதூகலிக்க‌
வாராயோ நீ மீண்டும் நலம் தாராயோ
எம் பொழுதும் எப் பொழுதும்
ப‌க‌ல‌வ‌ன் தான் வான் சிற‌க்க
கொண்டாடுவோம் இங்கு நாம் ப‌ண்பாடுவோம்
தை ம‌க‌ளை த‌மிழ் ம‌க‌ளாய்!

தை மாத‌ம் த‌மிழ‌ர்க‌ள் எம‌க்கு பொன்னான‌ மாத‌ம். தை பிற‌ந்தால் த‌மிழ‌ர் எம‌க்கு வ‌ழி பிற‌க்கும் என்று கூறுவார்க‌ள். அதிகாலைச் சூரிய‌ன் த‌ன் பொற் க‌ர‌ங்க‌ளை விரிக்க‌ சேவ‌ல் கூவி நாம் துயில் எழும்ப‌ ஆல‌ய‌க் கோயில்க‌ளில் ம‌ணி ஓசைக‌ள் முழ‌ங்க‌ த‌மிழ‌ர்க‌ளாகிய‌ நாம் வ‌ய‌ல் வ‌ர‌ம்புக‌ளில் இறங்கி நெற் க‌திரிக‌ளை அறுவ‌டை செய்து அரிசி எடுத்து க‌ரும்பும் நாட்டி பொங்க‌ல் பொங்கி சாமிக்கும் ப‌டைத்து அப்ப‌ப்பா... தை மாத‌ம‌ல்ல‌வோ அழ‌கிய‌ த‌மிழ் மாத‌ம். எங்கும் எதிலும் ம‌கால‌ட்சுமி க‌டாட்ஷ‌ம், பொங்கும் ம‌ல‌ரும் ம‌ங்க‌ளக‌ர‌ம். ந‌ம‌ஸ்கார‌ மாத‌ம் வ‌ண‌க்க‌த்துக்குரிய‌ எங்க‌ள் தை மாத்‌ம். எனவே இவ்வளவு நண்மை பயக்கும் தை மாதம் தானே எங்களுக்கு புதுமை படைக்கும் மாதம் புது மாதம் அதாவது புது வருட மாதமன்றோ?
ஆனாலும் சித்திரை...சித்திரைப் பெண் சிரிக்கின்றாள் த‌ன் முக‌ம் ம‌ல‌ர்ந்து
எத் திசையும் ந‌ற் திசையாய் இவ் வ‌ருட‌ம் எம‌க் க‌ருள‌
எக் க‌ண‌மும் எம் துயர்கள் இனி அகல‌
சித்திரையே ந‌ற் த‌ருவே நீடூழி வாழ்க‌ வென்று
சித்திரைப் பெண் சிரிக்கின்றாள் த‌ன் முக‌ம் ம‌ல‌ர்ந்து!

சித்திரை மாத‌ம் வ‌ருட‌த்தில் நான்காவ‌து மாத‌ம். அதாவ‌து ஒரு காலாண்டு க‌ழியும் மாதம். இல‌ங்கையில் நிதியாண்டு தொட‌ங்கும் கால‌ம். க‌த்த‌ரி வெயில் சுட்டெரிக்கும் மாத‌ம். த‌மிழ‌ர்க‌ள் த‌ம் நெற்றி விய‌ர்வை நில‌த்தில் சிந்த‌ க‌ஷ்ட‌ப்ப‌ட்டு உழைக்கும் கால‌ம். ஆனாலும் சிற‌ப்பான‌ மாத‌ம். இல‌ங்கையில் சித்திரை வ‌ந்தாலே அனைவ‌ரின‌து முக‌த்திலும் புன்சிரிப்புக்க‌ள் த‌வ‌ழ‌த் தொட‌ங்கிவிடும். கார‌ண‌ம் விசேட‌ கார‌ண‌ம் ‍ த‌மிழ் ‍ சிங்க‌ள‌ புதுவ‌ருட‌ம். ஏராள‌மான‌ விடுமுறைக‌ள் உண்டு. பாட‌சாலை விடுமுறையும் உண்டு. என‌வே அனைவ‌ரும் குடும்ப‌ ச‌கித‌மாக‌ ஒற்றுமையாக‌ ஒன்று கூடி சுற்றுலா செல்லுத‌ல், விருந்துப‌சார‌ங்க‌ளில் க‌ல‌ந்து கொள்ள‌ல், புத்தாடை அணித‌ல். ப‌ட்டாசு கொளுத்துத‌ல்(இப்ப‌ அனும‌தி த‌ந்திட்டாங்க‌) என ஓரே அமர்க்களமாகத் தான் இருக்கும் இம் மாதம். சித்திரை திங்க‌ள‌ன்றோ சிற‌ப்பான‌ திங்க‌ள் என்று கூற‌ வைக்கும் இம் மாத‌த்தில் அனைவ‌ரின‌து வீடுக‌ளிலும் சித்திரைப் பெண் வ‌ந்து உட்கார்ந்தும் விடுவாள். ஏனெனில் இல‌ங்கையில் இது த‌மிழ் ம‌ட்டும‌ல்ல‌ த‌மிழ்-சிங்க‌ள ம‌ன்னிக்க‌வும் சிங்க‌ள‌-த‌மிழ் புது வ‌ருட‌ம‌ன்றோ!
இல‌ங்கை தான் இன்றைய‌ திக‌தியின் க‌தா நாய‌க‌ன். அத்திப்ப‌ட்டி முருகேசு முத‌ல் அமெரிக்காவின் பில் கேட்ஸ் வ‌ரை இல‌ங்கையைப் ப‌ற்றி இன்றைய‌ திக‌தியில் அறியாத‌வ‌ர்க‌ள் எவ‌ருமே இல்லை என‌க் கூற‌லாம். கார‌ண‌ம் கின்ன‌ஸ் சாத‌னைக‌ள் ஒன்றுமில்லை இல‌ங்கையில் ந‌ட‌க்கும் யுத்த‌ம் கொடூர‌ யுத்த‌ம். இவ் யுத்த‌த்திற்கு ப‌ல்வேறு ப‌ட்ட‌ அர‌சிய‌ல் கார‌ண‌ங்க‌ள் கூற‌ப்ப‌ட்டாலும் உண்மைக் கார‌ண‌ம் இன‌ வேறுபாடு. அதாவ‌து எம‌து ச‌கோத‌ர‌ மொழி ம‌க்க‌ளாகிய‌ சிங்க‌ள் ச‌முதாய‌த்திற்கும் எம‌து த‌மிழ் ச‌முதாய‌த்திற்கும் இடையில் ஏற்ப‌ட்ட‌ ஒரு சிறு பொறி இன்று கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிற‌து. ஆக‌ மொத்த‌த்தில் இது ஒரு இன‌ப் போர், ஒரு இன‌த்திற்கு எதிரான‌ போர் என்றெல்லாம் ப‌ல்வேறு ப‌ட்ட‌ வியாக்கியான‌ங்க‌ளை ப‌ல‌ர் கூறிக்கொண்டிருக்கையில் (ச‌த்திய‌மா நான் இங்க‌ அர‌சிய‌ல் பேச‌ வ‌ர‌லைங்க‌)நான் எடுத்துக் கொண்ட‌ விட‌ய‌ம் இது அல்லவே. நான் இங்கு கூற‌ வ‌ந்த‌து சித்திரைப் பெண்ணை பற்றியன்றோ..., எம‌க்கு வ‌ர‌ப்போகும் புது வ‌ருட‌த்தை பற்றியன்றோ...அத‌ற்கும் இத‌ற்கும் என்ன‌ ச‌ம்ம‌ந்த‌ம் என்றா கேட்கிறீர்க‌ள்? இருக்க‌வே இருக்கிற‌து ச‌ம்ம‌ந்த‌ம், மிக‌ப் பெரிய‌ ச‌ம்ம‌ந்த‌ம். ஆர‌ம்ப‌ கால‌ங்க‌ளில் ஏற்ப‌ட்ட‌ சிறு சிறு ம‌ன‌க் க‌ச‌ப்புக்க‌ள், கோள் மூட்ட‌ல்க‌ள், பொறாமைக‌ள், ப‌கைக‌ள், விரோத‌ங்க‌ள் போன்ற‌ன‌ எம‌து ச‌கோத‌ர‌ மொழி ம‌க்க‌ளுக்கும் எம‌க்கும் இடையில் ஒரு வித‌மான‌ குரோத மன‌ப்பாண்மை உண்டாக‌ கார‌ண‌மாகி பின்ன‌ர் அது வெறுப்பாகி இன்று அது பாரிய யுத்த‌ம் என்னும் நிலைக்கு இழுத்துச் செல்ல‌ப்ப‌ட்டிருக்கும் நிலையில் எங்க‌ளையும் எங்க‌ள் ச‌கோத‌ர‌ மொழி ம‌க்க‌ளையும் ஒன்று ப‌டுத்தி ஒற்றுமையுட‌னும் பரஸ்பரத்துடனும் புன்னகைக்க‌ வைப்ப‌து இவ் எம‌து சித்திரை புத்தாண்டு தான் என்று கூறினால் மிகையாகாத‌ன்றோ! ந‌ம் இரு இன‌மும் சேர்ந்து கொண்டாடும் ம‌க‌த்தான‌ நாள் அதுவ‌ன்றோ! அட‌ ஆமாங்க‌ அன்றைய‌ நாளில் பூக்கும் அமைதி, சின்ன‌ சின்ன மகிழ்ச்சிகள், புன்சிரிப்புக்கள், ஆல‌ய‌ ப‌ரிசுத்த‌ம், கோயில் ம‌ணி ஓசை,எங்கும் எதிலும் சுபீட்ச‌ம், ச‌ந்தோஷ‌ம், தெய்வீக‌ம் இவை யாவும் ந‌ம் இரு இன‌மும் சேர்ந்து கொண்டாடும் ப‌ண்டிகை என்ற‌தால் ஆன‌த‌ன்றோ? அச் செல்வ‌ம் த‌ரும் சித்திரையை ந‌ம் ந‌ட்புற‌வை கொண்டு வ‌ரும் புத்தாண்டை நாம் தையில் எவ்வாறு மாற்றிய‌மைக்க‌ முடியும்?
உள் நாட்டு போர் வெற்றி தோல்விக‌ளால் அடிக்க‌டி த‌ம‌து முக பாவ‌ங்க‌ளை மாற்றிக் கொள்ளும் எம‌து ச‌கோதர‌ மொழி ந‌ண்ப‌ர்க‌ள் த‌ங்க‌ளுட‌ன் சேர்ந்து நாங்க‌ளும் கொண்டாடும் புது வ‌ருட‌ தின‌த்தில‌ன்றோ உள‌மார‌ சிரிக்கின்றார்க‌ள், சிநேக‌த்துட‌ன் கை குலுக்குகிறார்க‌ள், தோழமையுடன் வாழ்த்துத‌ல்க‌ளை ப‌ரிமாறிக் கொள்கின்றார்க‌ள், பிரிய‌த்துட‌ன் த‌ம‌க்குப் பிடித்த‌மான‌ எம‌து சிற்றுண்டிக‌ளையும் சுவைத்து உண்கின்றார்க‌ள். நாமும் தான் அன்றோ? அன்று தான் அன்றைய‌ நாளில் தான் எம‌க்கும் அவ‌ர்க‌ளுக்குமான‌ இன‌த் துவேச‌ம் காற்றைக் க‌ண்ட‌ இல‌வ‌ம் ப‌ஞ்சைப் போன்று ப‌ற‌ந்தோடி விடுகின்ற‌த‌ன்றோ? எங்கும் எதிலும் ம‌கிழ்ச்சி ச‌ந்தோஷ‌ம் ம‌ட்டும் தான் உண‌ர‌ப் படுகின்ற‌த‌ன்றோ? அவ‌னோ இல்லை அவ‌ளோ சொல்லுகின்றன‌ர் அட‌, இவ‌ர்க‌ள் எம‌து ச‌கோத‌ர‌ மொழி ம‌க்க‌ள். இவ‌ர்க‌ளும் ந‌ம்மை போன்ற‌வ‌ர்க‌ளே. வாருங்க‌ள் எல்லோரும் சேர்ந்து வ‌ர‌வேற்போம் ந‌ம‌து புத்தாண்டை புது ஆண்டை!*****************************************************************************
இவ்வாறாக‌; ஆனாப் ப‌ட்ட‌ அவுஸ்திரேலியா காட்டுத்தீயையே அழித்து விட்ட‌ ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌ம் இவ் இன‌த் தீயை அழிக்க‌ முடியாம‌ல் மூச்சு முட்டி நிற்கும் இவ் வேளை ஒரு ந‌ல்லிண‌க்க‌த்தை புரிந்துண‌ர்வை ஒற்றுமையை கொண்டுவ‌ரும் இப் புத்தான்டான‌து ந‌ம் இரு இன‌ ம‌க்க‌ளும் சேர்ந்து கொண்டாடுவ‌த‌ற்காக‌ தையில‌ல்ல‌ சித்திரையிலே சிற‌ப்பிப்ப‌தே சால‌ச் சிற‌ந்த‌தாகும் என்ப‌து என் எண்ண‌ம்.


அட‌ எல்லாத்தையும் விட்டு விடுங்க‌ள் சேர‌வே முடியாத‌ இரு வேறுப‌ட்ட‌ இன‌ ம‌க்க‌ளை சேர்த்து வைக்கும் இப் புது வ‌ருட‌ம் சித்திரையில் கொண்டாடினால் தான் என்ன‌? பொன் விளைந்தால் தான் என்ன‌? பொருள் விளைந்தால் தான் என்ன‌? ஒற்றுமையை விளைவிப்ப‌து சித்திரைப் பெண் தான‌ன்றோ?

எல்லாம் ஒரு நாள் மாறும். எமக்கும் அமைதி பிறக்கும். எமது சகோதர இன மக்கள் எம்மை ஒரு நாள் புரிந்து கொள்வார்கள். அந்த நம்பிக்கை எனக்குண்டு. அப்பொழுது நம் இரு இனமும் ஒன்றாக கூடி வரவேற்போம் எமது இனிய புத்தாண்டை. அது வரையிலாவது விட்டுவப்போம் சித்திரைப் புத்தாண்டு சித்திதையில் பிறப்பதை!
**************************************************************************என்ன‌ நான் சொல்வ‌து? இது என‌து த‌னிப்ப‌ட்ட‌ அபிப்பிராய‌ம் ம‌ட்டுமே. இது ச‌ரியா இல்லை த‌வ‌றா...? நீங்க‌ள் தான் சொல்ல‌ வேண்டும் ந‌ண்ப‌ர்க‌ளே!