ஞாயிறு, மார்ச் 29, 2009

உங்களுக்கு தெரியுமா அவர்கள் என்ன தான் பேசுகிறார்கள்???


"தத்தி தத்தி நடை பயின்று
கொஞ்சும் மொழி பேசி
வட்டமிட்டு வலம் வந்து
தன் அம்மாவின் கன்னத்தில்
'இச்' ஒன்று பதித்திடும்
எம் செல்லக் கண்மணிகளுக்கு..."

ஆமாங்க நான் இங்கு பேச வந்திருப்பது மழலைகளின் மொழி பற்றித் தானுங்க, அந்த ஆண்டவன் படைப்பில் உலகில் ஆயிரம் ஆயிரம் மனிதர்கள் அம் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு சிறப்பு. காதலர்களுக்கு காதல் சிறப்பு, மாணவர்களுக்கு கல்வி சிறப்பு, பெற்றொர்களுக்கு பிள்ளைகள் சிறப்பு, தொழிலாலர்களுக்கு உழைப்பு சிறப்பு. இவ்வாறுள்ள ஆயிரமாயிரம் சிற்ப்புக்களுள் நான் மிகவும் இனிமையானதாகவும் ரசிக்கத் தக்கதாகவும் கருதுவது எம் மழலை செல்வங்களின் கொஞ்சும் மொழியைத் தான்.


பொதுவாக சிறுவயதில் குழந்தைகள் எல்லோருமே அழகாகத் தான் இருப்பார்கள். அவர்களது குறும்புகள் சேஷ்டைகளிற்கு அளவிருக்காது. அவர்களது மழலை மொழி எங்களுக்கு புரியவே புரியாது, ஆனால் அம் மொழியை கேட்கும் போது எங்களுக்கு திகட்டவே திகட்டாது. அத்தனை ஆசையாக இருக்கும் அவர்களது மழலை மொழி. இதை பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?பொதுவாக ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டால் அது ஆகாரம் சாப்பிடுவதற்கு "நண்ணா" வேனும் என்கிறது, இன்னொரு குழந்தை அதே ஆகாரத்தை "அவ்வா" என்கிறது. எப்படித் தான் கண்டுபிடிக்கிறார்களோ இப்படியொரு அற்புதமான மொழிப் படைப்பை! இதனால் தான் எந்த வள்ளுவனும் குழந்தை அகராதி என்றொண்டை உருவாக்காமலே போயிருப்பானோ?


கண்களால் சிரிப்பதும், வாண்டுத்தனமும், தத்தக்க பித்தக்க போன்ற அவர்களது மொழிப்படைப்பும் அப்பப்பா... அவர்களுக்கே உரிய வர்ணனைகள் அன்றோ?நான் சில வேளைகளில் நினைப்பதுண்டு இந்த வாண்டுகளைப் பார்த்து எங்களது வாண்டுகள் அதாவது இலங்கை, இந்தியாக் கண்டங்களை சேர்ந்த வாண்டுகள் ண , ந என்றும் சீனா யப்பான் தேசங்களை சேர்ந்த வாண்டுகள் ங, ஞ என்றும் மேற்கு ஜரோப்பிய நாடுகளை சேர்ந்த வாண்டுகள் ஷா, ஷீ என்றும் கதைப்பார்களோ என்று , ஏனெனில் அத்தனை ரசிக்கத் தக்கவை இவர்களது மழலை மொழி. புதிது புதிதாக மொழிகளை உருவாக்க இவர்களால் மட்டும் தான் முடியுமோ என்னவோ?எனது அக்காவிற்கு ஒரு மகள் இருக்கிறார். ஆள் படு சுட்டி. தேவதை வம்சம் என்றே அவளைப் பார்த்தால் கூறத் தோன்றும். அகன்ற பெரிய கண்களும் வட்ட முகமுமாய் எப்பொழுதும் தூக்கிக் கொஞ்சத் தோன்றும் அழகு உருவம் கொண்ட வாண்டு அவள். எங்கள் எல்லோரினதும் குட்டிப் பிசாசும் அவள் தான். அண்மையில் தான் தனது 2வது வருட பிறந்த தினத்தை(29.03.2009) கொண்டாடி மகிழ்ந்திருந்தாள். ஏன் இந்த குட்டியைப் பற்றி நான் குறிப்பிடுகிறேன் என்றால் இவள் தான் எனது அக்காவின் ஒரே ஒரு செல்ல வாரிசு. இவளை இவளது பெற்றோர் ஒரு பொக்கிஷம் போலவே பாதுகாக்கின்றனர். படு செல்லம் அவளுக்கு. அப்போ இக் குட்டியின் சேஷ்டைகள் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?


நானும் அக்காவும் அடிக்க‌டி உரையாடும் ச‌ந்த‌ர்ப‌ங்க‌ளில் தானும் ஆஜ‌ராகி விடுவா இந்த‌ குட்டி வாண்டு. இந்த‌ குட்டி வான்டுக்கு த‌ன்னைத் தான் த‌ன்னை ம‌ட்டும் தான் க‌வ‌னிக்க‌ வேண்டும். அத‌ற்காக‌ இந்த‌ குட்டி வாண்டு செய்யும் அட்ட‌காச‌ங்க‌ள் ர‌சிக்க‌த் த‌க்க‌வை. இவ‌ளைப் பார்ப்ப‌திலே எங்க‌ள‌து பொழுதுக‌ள் யாவும் க‌ழிந்துவிடும். அவ்வாறான‌ குறும்புக்காரி. இவ‌ர‌து மொழி ர‌சிக்க‌த் த‌க்க‌து. விளையாட்டு க‌ர‌மான‌து. ஆனால் எங்க‌ளுக்கு அது புரிய‌வே புரியாது. ஆனாலும் நாங்க‌ள் தின‌ம் தின‌ம் அதை கேட்டு ர‌சிப்போம். எந்த‌ தித்திப்பான‌ இனிப்புப் ப‌ண்ட‌மும் தோற்றுப் போய்விடும் இம் ம‌ழலைகளின் கொஞ்சும் மொழிக்கு முன்னால். அத்த‌னை அழ‌கு. ஆனால் அம்மொழிக‌ள் எம‌க்கு புரிவ‌தில்லை.பொதுவாக‌ நாங்க‌ள் எம‌க்குப் புரியாத‌ எதையுமே பெரிதாக‌ ர‌சிப்ப‌தில்லை தானே? ஆனால் ம‌ழ‌லை மொழி எம‌க்கு புரியாத‌ புதிர் என்ற போதிலும் நாம் ர‌சிக்கின்றோம், சிரிக்கின்றோம், ம‌ன‌ நிறைவும் அடைகின்றோம். அது ஏன்? அட‌ உங்க‌ளுக்காவ‌து தெரியுமா அவ‌ர்க‌ள் என்ன‌ தான் பேசிகிறார்க‌ள் என்று...?

***Wish u a Happy Birthday

Sabia Kutty!***

புதன், மார்ச் 18, 2009

ஒரு தியாகியின் பதிவேடுகளிலிருந்து...


ஒவ்வொரு முறை நான் தோற்கும் போதும்
உறுதி எடுத்துக் கொள்வேன் மற்றவன்
நன்றாக வாழ வேண்டுமென்று


என் இரத்தத் துளிகளெல்லாம் இம் மண்ணில்
சிதறுண்ட போதும் நான் பேருவகை கொள்வேன்
என் இனத்தின் வியர்வைத் துளிகள் இங்கு பயிரிடப்பட வேண்டுமென்று


என் சந்ததியெல்லாம் வேரறுக்கப்படும் போதும்
நான் திடசங்கற்பம் பூணுவேன் வரும்
சந்ததியாவது தழைத்தோங்க வேண்டுமென்று


என் பாதைகளெங்கும் முட்கள் சூழ்ந்த போதும்
நான் மன உறுதி கொள்வேன் நாளை என்
மக்கள் நீங்கள் நலமுடனே வாழவேண்டுமென்று!

வியாழன், மார்ச் 12, 2009

சின்னப் பூவே மெல்லப் பேசு... (பாகம் 03)


இச் சந்தர்ப்பத்தில் தான் உள்நாட்டுப் போரும் தீவிரமடைய ஆரம்பித்தது. இலங்கை இராணுவம் வெற்றிக் களிப்புடன் ஒவ்வொரு இடமாக கைப்பற்ற தொடங்கினர். போரில் அகப்பட்ட மக்கள் அனைவரும் செய்வதறியாது தவிக்கலாயினர். உலகமே இவர்களது போரை வேடிக்கை பார்த்தது. குமரன் தனது குடும்பத்தையும், தாரணியின் குடும்பத்தையும் பாதுகாப்பின் நிமித்தம் கட்டாயப் படுத்தி வேறு இடத்திற்கு அனுப்பி வைத்தான். குமரனின் தந்தை அவனையும் தங்களோடு வரச் சொல்லி எவ்வளவோ கெஞ்சியும் அவனால் அவர்களுடன் போக முடியாத சூழ்நிலை. என்ன தான் அவன் அவர்களது அலுவலகத்தில் ஒரு உத்தியோகத்தனாக கடமை புரிந்தாலும் அவனும் அவ் இயக்கத்தில் உறுப்பினன் தானே...? அதனாலேயே அவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவனும் அவர்களுடன் சேர்ந்து அவ் யுத்தத்துக்குள் உட்பட்டும் கொண்டான்.


இங்கோ தாரணியோ குமரனிடம் இருந்தோ தனது பெற்றோரிடமிருந்தோ எது வித தகவலும் இன்றி தனியே தவிக்கலானாள். அவளது நாட்கள் கண்ணீரில் கரையலாயின. எப்போதாவது பெற்றோரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வரும், அவர்கள் எடுத்து பேசுவார்கள் ஆனால் குமரன் பற்றிய தகவல்கள் அவர்களுக்குக் கூட தெரிந்திருக்கவில்லை. போரும் உக்கிரமடைய ஆரம்பிக்க தாரணியின் மன வேதனைகளும் உக்கிரமடைய ஆரம்பித்தன.மாதங்கள் சில கடந்த நிலையில் கிளிநொச்சி மாநகரை கைப்பற்றிப் பிடித்த செய்தியை பட்டாசு முழக்கங்களுடன் அரசு அறிவித்தது. எங்கும் எதிலும் அரசின் வெற்றிச் செய்தியே எக்காள தொனியுடன் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இடம் பெயர்ந்த மக்களும் சிறிது சிறிதாக தங்கள் ஊர்களுக்கு திரும்பத் தொடங்கினர். குமரனின் குடும்பமும் தமது சொந்த ஊரை வந்தடைந்தனர். இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருந்த சமயம் அது. ஆனால் குமரனின் தந்தை அஞ்சவில்லை. அவருக்கு தன் மகனின் ஆயுளின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் விதி? குமரனின் உயிரற்ற உடலே அவருக்கு பரிசாக கிடைத்தது. குண்டுகள் துளைக்கப்பட்டு சிதைவடைந்த நிலையில் வெள்ளை துணிகளால் சுற்றப்பட்டு அவர் முன் பார்வைக்காக‌ வைக்கப்பட்டது அவனது உயிரற்ற வெறும் உடலே. தன் மகன் மரணமான காட்சியை காண சகிக்காத அவர் வயிற்றிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தழுதார்.குமரன்...,,, அவரது முதற் பிள்ளை. சிறு வயதுகளில் அவரது கரம் பிடித்து இவ் வயல் வெளியெங்கும் ஓடி மகிழ்ந்தவன். உயர்தர பரீட்சையில் அதி சிறந்த பெறுபேறுகளை பெற்று இவ் ஊரார் வாயாலே புகழுரை கேட்கப் பெற்றவன். தன் தம்பியின் நல் வாழ்வுக்காக தன் வாழ்வை பணயம் வைத்தவன். இன்று அவர்கள் முன்னிலையில் உயிரற்ற வெறும் உடலாய் கிடத்தப்பட்டிருந்தான். அழுதார்கள், புலம்பினார்கள். ஆனால் மாண்டவன் மீள்வானோ...? மீண்டெமைக் காண்பானோ...?


நாட்கள் கடந்திருந்த படியால் குண்டு துளைக்கப்பட்ட அவனது உடல் உடனடியாக புதைக்கவோ இல்லை எரிக்கவோ வேண்டிய கட்டாயம். அதிலும் அவன் அவ் இயக்கத்தின் உறுப்பினனும் ஆதலால் அவர்களிடம் அவனது உடல் தர அனுமதி மறுக்கப் பட்டது. சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அவனது உடல் தகனமும் செய்யப்பட்டது. அவனுடன் சேர்த்து நூற்றுக்கணக்கான உடல்களை தீயின் கோரப்பற்கள் விழுங்கிக் கொண்டன. இறுதியாக குமரனின் சாம்பல் அஸ்தியாக அவனது தகப்பனாரிடம் கையளிக்கப்பட்டது.


அஸ்தி கரைப்பதற்கு முன்னர் தன் வருங்கால மருமகள் என்று கனவு கண்டு வைத்திருந்தவளிடம் கனவு நொறுங்கி விட்ட செய்தியை கூற தொலைபேசி அழைப்பெடுத்தார் குமரனின் தந்தை. ஏற்கனவே பாதி உயிர் மாள மீதி உயிர் நோக வாழ்ந்து கொண்டிருந்த தாரணி அவனது மரணச் செய்தியினை கேட்ட கணம் தன் கையிலிருந்த தொலைபேசி தவற பூமி பிழந்து தன்னை உள்ளிழுப்பது போல் தோன்ற மயங்கிச் சரிந்தாள் நிலத்தில்.
அவ்வேளை அவளுடன் கூடவே இருந்த நண்பி அவளது நில‌மையை புரிந்து கொண்டு அவளை தாங்கினாள், தேற்றினாள். அவளது குடும்பமே தாரணிக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறிக்கொண்டிருந்தனர். இருந்தும் தாரணி இன்றைக்கொரு நடைப்பிணம் போலவே வாழ்கிறாள். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக தொடர்ந்த அவர்களது காதல் பறித்துக் கொள்ளப்பட்ட செய்தியை அவளால் ஜீரணிக்க கூட முடியவில்லை .
கண்ணீரே அவளது பொழுதுகள் என்றாயின‌.வேதனைகளே அவளது தருணங்கள் என்றாயின. தாரணி இன்றும் வாழ்கிறாள், வேலைக்கும் செல்கிறாள். ஆனால் அவள் தனக்கென்று இனி ஒரு எதிர்காலம் இருப்பதாக நினைத்துப் பார்க்கவில்லை. நாளை நாளை என்று வாழும் மனிதர் மத்தியில் இன்று கூட வாழ மறுக்கும் அவள் தாரணி, நான்கு சுவர்களுக்கிடையில் அமர்ந்திருந்து கண்களில் கண்ணீர் வழிய முகட்டை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
முற்றும்.

திங்கள், மார்ச் 09, 2009

சின்ன‌ப் பூவே மெல்ல‌ப் பேசு...(பாக‌ம் 02)


தாரணியின் பயத்தை கண்டு அவனுக்கு சிரிப்பும் வந்தது. அவன் அப்பாவியான அப்பெண்னை நோக்கி "பயப்படாதீங்க தாரணி, எங்கட அப்பாக்கு ஒன்டும் இல்ல. நீங்க பயப்பட்டு கொண்டிருப்பீங்க எண்டு தான் அப்பா உங்களட்ட சொல்லீற்று வரச் சொன்னார். "அப்ப‌ ச‌ரி நான் வாற‌ன் என்ன‌"என்று கூறிவிட்டு விடை பெற்றான்.

ஆனால் அன்றைய தினமோ அவன் கண்கள் தான் விடை பெற்றது, மனம் என்னமோ தாரணியிடம் தான் சிக்கிக் கொண்டது. அன்று ஆரம்பமான அவர்களின் முதல் சந்திப்பு அவர்களை நண்பர்களாக்கியது. அன்றிலிருந்து தாரணிக்கு பல வகைகளிலும் உதவி புரியலானான் குமரன். தாரணி தனது பாடம் சம்மந்தமான அனைத்து விளக்கங்களையும் குமரனிடம் கேட்டு புரிந்து கொண்டாள். அவர்களிடைய அத்தகைய நட்பு காலப் போக்கில் காதலாகவும் உருவெடுத்தது. ஆனால் அவர்கள் அச் சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவர்களாக இருந்த படியால் தங்கள் காதலை ஒருவருக்கொருவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. படிப்பு முடியட்டும் என்று குமரனும், குமரனே முதலில் சொல்லட்டும் என்று தாரணியும் இருந்து விட்டனர். ஆனால் அவ் இருவரினது நட்பும் அவர்களை இணைபிரியா நண்பர்கள் என கூற வைத்தது. இவ்வாறு இருக்கையில் தாரணி க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறு பேறுகளை பெற்று தான் விரும்பிய படியே விஞ்ஞான பிரிவுக்குள் காலடி எடுத்து வைத்தாள்.

நாட்கள் நகரலாயின குமரன் தனது வணிகவியல் கற்கை நெறியில் கிளிநொச்சி மாவாட்டத்திலேயே அதி கூடிய புள்ளிகளை பெற்று முதல் மாணவனாக தெரிவு செய்யப்பட்டான். ஊரே அவனை கொண்டாடியது. தாரணியின் மகிழ்ச்சிக்கு சொல்லவும் வேண்டுமா...? இதேவேளை கும‌ர‌ன் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் செல்ல‌ வேண்டிய‌ நாளும் வ‌ந்த‌து. கும‌ர‌னுக்கு யாழ்ப்பாண‌ ப‌ல்ல‌க‌லைக் க‌ழ‌க‌ம் கிடைக்க‌ப் பெற்றிருந்த‌து. இருவ‌ருக்கும் பிரிய‌ வேண்டிய‌ சூழ்நிலை, ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் செல்வ‌த‌ற்கு முத‌ல் நாள் கும‌ர‌ன் த‌ன் காத‌லை வெளிப்ப‌டுத்தினான். கண்களில் கண்ணீர் பெருக‌ஆன‌ந்த‌மாக‌ த‌ன‌க்கும் அவ‌னை மிகவும் பிடித்திருப்ப‌தாக‌ கூறினாள். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த‌ அவ‌ன் தார‌ணியிட‌ம் எத‌ற்கும் ப‌ய‌ப்ப‌ட‌ வேண்டாம் தான் நிட்ச‌ய‌மாக‌ அவ‌ளின் க‌ர‌ம் ப‌ற்றுவேன் என‌ உறுதிமொழி அளித்து விட்டு ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌ம் புற‌ப்ப‌ட‌லானான்.


யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகம் முற்றும் வித்தியாசமான சூழ்நிலை படிப்புடன் பகடிகள் பல இருந்த போதிலும் அவன் தாரணியின் நினைவுகளில் இருந்து விடுபடவேயில்லை. இவனது காதல் மடல் அவளது அன்புக் கரம் நோக்கி தவழ்ந்து கொண்டுதானிருந்தது.


இதேவேளை தாரணியும் க.பொ.த(உ/த) பரீட்சை பெறுபேறுகளை எழுதி முடித்திருந்தாள். ஆனால் அவள் விரும்பிய வைத்திய தொழிலுக்குரிய பெறுபேறுகள் கிடைக்காததால் பெருத்ததொரு ஏமாற்றமே அவளுக்கு பரிசாக கிடைத்தது. ஆனாலும் அவள் மனம் சோர்ந்து போய்விடவில்லை. தனது பெற்றோரினது சம்மதத்துடன் தாதியர் பயிற்ச்சி நெறிக்கு விண்ணப்ப படிவம் அனுப்பினாள். அவளது அதிஷ்டம் யாழ்ப்பாணம் தாதியர் பயிற்ச்சி கல்லூரிக்கு அவள் தெரிவு செய்யப்பட்டாள். தனயன் யாழ்ப்பாணத்தில் இருப்பதினால் பெற்றோரினது சம்மதமும் கிடைத்து விட எல்லாவற்றிற்கு மேலாக குமரனும் யாழ் பல்கலைகழகத்திலேயே பயின்று வருவதினாலும் தாரணி யாழ் செல்லும் நாளை மிக மிக ஆவலுடன் எதிர்பார்க்க தொடங்கினாள்.அவள் எதிர் பார்த்த அந்த பொன்னான நன் நாளும் வந்து சேர்ந்தது. அவளும் யாழ் நகரை வந்தடைந்தாள். அவளுக்கு தனது பயிற்ச்சிக் கல்லூரியிலே இடம் கிடைத்துவிட அங்கேயே தங்கி தனது படிப்பை தொடரலானாள். பயிற்ச்சிக் கல்லூரியில் நிறைய தோழியரும் அறிமுகமாயினர். இயல்பிலேயே இரக்க சுபாவம் நிறைந்த தாரணிக்கு தாதியர் வேலையும் வெகுவாக பிடித்துவிட நாட்கள் ஆனந்தமாகவே நகரலாயின. இடைஇடையே குமரனிடமிருந்து வரும் பதில்களும் மகிழ்ச்சி தருவனவாகவே அமைந்தன.நாட்கள் நகர்ந்தன, மாதங்கள் வருடங்களாகியது. கிளிநொச்சியில் குடும்பத்தில் ஒரு பிள்ளை கட்டாயமாக விடுதலைப் புலிகளில் சேர வேண்டிய ஒரு சூழ்நிலை. குமரனின் குடும்பமும் இதற்கு விதிவிலக்காகவில்லை. குமரனின் 2வது தம்பியும் கட்டாயத்தின் நிமித்தம் விடுதலை புலிகளின் உறுப்பினனான். குமரனின் தந்தை எவ்வளவு கெஞ்சியும் அதற்கு பலனிருக்கவில்லை. "உங்களின் அடுத்த சந்ததி நலமாக வாழவேண்டுமெனில் இந்த சந்ததியில் ஒருவரை தியாகம் செய்யுங்கள்" என்பதே அவர்களது பதிலாக இருந்தது. அப்போது குமரனுக்கு இறுதியாண்டு. தனது எதிர்காலம் பற்றியும், தனது குடும்பம் பற்றியும் ஆயிரம் ஆயிரம் ஆசைக் கணவுகள் கண்டு கொண்டிருந்தவனுக்கும் இச் செய்தி பேரிடியாகவே இருந்தது. தன் துயரங்களை மறைக்க முயன்றவன் முடியாது வாய் விட்டு கதறி அழுதான்.ஒருவாறாக‌ த‌ன‌து ப‌ல்க‌லைக‌ழ‌க‌ ப‌டிப்பை நிறைவு செய்தவன், கிளிநொச்சிக்கு ஓடினான். அங்கு வேற‌றுந்த‌ ம‌ர‌ம் போல் திர‌ணிய‌ற்ற முகங்களுடன் க‌ண்ணீர் சிந்தி வ‌ர‌வ‌ழைத்த‌ அவ‌ன‌து பெற்றோரை காண்கையில் அவ‌ன‌து ம‌ன‌மும் ஊமையாய் அழுத‌து. அந்த‌ ஒரு நொடிப் பொழுதில் முடிவெடுத்தான் கும‌ர‌ன். த‌ன் த‌ம்பியின் வாழ்விற்காக‌ த‌ன‌து த‌லையை அடைமான‌ம் வைத்தான் அவ‌ன் . பெற்றோருக்கு தெரிய‌ப்ப‌டுத்தாம‌லே இவ் முடிவை மேற்கொள்ளலானான் . த‌ன் த‌ம்பியை விடுவித்தவன், ப‌த்திர‌மாக‌ அவ‌னை யாழ் ந‌க‌ரிற்கும் அனுப்பி வைத்தான். உருக்குலைந்து நின்ற‌ பெற்றோருக்கு த‌ன் பார்வையாலே ஆறுத‌ல் மொழி கூறினான் குமரன்.ஆனால் அங்கே அவ் வியக்கத்திலோ அவனது திறமைக்கே முன்னிரிமை வழங்கப்பட்டது. அவர்களது அலுவலகத்தில் அவனை ஒரு உத்தியோகத்தனாக்கினார்கள். அவர்களுடைய கணக்கு வழக்கு சம்மந்தமான சகல பொறுப்புகளும் அவனிடமே ஒப்படைக்கப் பட்டது. அவர்களது அரசியல் அலுவலகத்தில் அவன் ஒரு கணக்காளன் ஆனான்.இந் நிகழ்ச்சிகளை தாரணி கேள்வியுற்ற போது மிகுந்த வேதனை அடைந்தாள். குமரனின் கடிதங்களே அவளை தேற்றின. "நிலைமை சரி வரும், அப்போது எங்களுக்கும் எழுச்சி கிடைக்கும் நாங்களும் மதிக்கப் படுவோம்" என்ற அவனது வார்த்தைகள் அவளுக்கு மிகுந்த நம்பிக்கை ஊட்டுவதாகவே அமைந்திருந்தன. குமரனுக்காக தினம் தினம் அவள் இறைவனை வேண்டலானாள்.


இவ்வாறு இருக்கையில் தார‌ணியின் ப‌டிப்பும் நிறைவடைந்தது. அவ‌ள் வ‌வுனியா வைத்திய‌சாலைக்கு தாதியாக தெரிவு செய்ய‌ப்ப‌ட்டாள். இத‌ற்கிடையில் கிளிநொச்சி சென்ற‌ தார‌ணி த‌ன‌து காத‌லை பெற்றோரிட‌ம் தெரிய‌ப்ப‌டுத்தினாள். இக் காத‌ல் ப‌ற்றி ஏற்க‌ன‌வே அறிந்திருந்த‌ அவ‌ள‌து த‌ந்தை கும‌ர‌னின் குடும்ப‌ம் ப‌ற்றியும் ந‌ன்கு அறிந்திருந்தார். சொல்ல‌ப் போனால் அவ‌ர் அக் குடும்ப‌த்தின் மேல் மிகுந்த‌ ம‌திப்பும் ம‌ரியாதையும் வைத்திருந்தார் என்றே கூற‌லாம். ஆனால் கும‌ர‌னின் த‌ற்போதைய‌ நிலை அவ‌ரை ஆட்ட‌ம் காண‌ வைத்த‌து. ஆனால் தார‌ணியின் க‌ண்ணீருக்கு முன் அவ‌ரால் ம‌றுப்பு கூற‌ முடிய‌வில்லை. ம‌ன‌மின்றி சம்மதம் அளித்தார். த‌க‌வ‌ல் கும‌ர‌னின் வீட்டிற்கும் தெரிய‌ப்ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌து. கும‌ர‌னின் குடும்ப‌த்தின‌ர் தார‌ணியை த‌லை மேல் வைத்து கொண்டாட‌லாயின‌ர். இத‌னால் பெரிதும் ம‌ன‌ம் ம‌கிழ்ந்த‌ கும‌ர‌னும் முட்க‌ளிலும் ம‌ல‌ரும் றோஜாவைப் போல் சிரிப்புட‌ன் த‌லைய‌சைத்து த‌ன் சிநேக‌ம் சொல்லி வ‌ழி அனுப்பி வைத்தான் தார‌ணியை வ‌வுனியா வைத்திய‌சாலைக்கு.


வ‌வுனியா சென்ற‌டைந்த‌ தார‌ணியும் தன்னுடன் பயின்ற நண்பி ஒருவரின் வீட்டில் இடம் கிடைத்து விடவே அங்கிருந்த படியே தனது பணிக்கு சென்று வரலானாள். ந‌ண்பியின் குடும்ப‌மோ தார‌ணியின் மேல் மிகுந்த‌ அக்க‌றை பாராட்டிய‌து. நாட்க‌ள் ந‌க‌ர்ந்து கொண்டேதானிருந்த‌ன‌. அடிக்க‌டி வ‌ரும் கும‌ர‌னின் குல‌ம் விசாரிப்புக்க‌ள் அவ‌ளை வாழ‌ வைத்துக் கொண்டிருந்த‌து.தொட‌ரும்...

ஞாயிறு, மார்ச் 08, 2009

சின்னப் பூவே மெல்லப் பேசு...(பாக‌ம் 01)


நான்கு சுவர்களுக்கிடையில் அமர்ந்திருந்து கண்களில் நீர் வழிய முகட்டை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் தாரணி. அவளுடைய நினைப்பெல்லாம் குமரன், குமரன்,குமரன் என்ற ஒருவனை பற்றியதாகவே அமைந்திருந்தது.

குமரன் கிளிநொச்சியை பிறப்பிடமாக கொண்டவன், நல்லதொரு தாய் தகப்பனிற்கு இவன் தான் தலைப்பிள்ளை. இவனுக்கு பின்னர் இரு தம்பியும் கடைக்குட்டி பிரியாவுமே இவனது குடும்ப சொத்தாக இருந்தது. தகப்பனார் தணிகாசலம் தனக்கு சொந்தமான வயலில் விவசாயம் செய்து அதன் மூலம் ஈட்டிய வருவாயில் தனது பிள்ளைகளை குறையற படிப்பித்து வந்தார். என்ன தான் வறுமை அவர்களை அடிக்கடி சிறைப் பிடித்தாலும் அவர்கள் நால்வரும் தமது பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் படிப்பில் படு சுட்டிகளாகவே விளங்கினர். அதிலும் குமரன் அதி புத்திசாலி என்றே கூறலாம். எதனையும் சட்டென புரிந்து கொள்ளும் கற்பூர புத்தி அவனுக்கு வாய்த்திருந்தது. இப்பொழுது அவன் உயர்தர வகுப்பில் முதலமாண்டு மாணவன். வகுப்பில் தன் தந்தைக்கு உதவும் நேரம் போக மிகுதி நேரமெல்லாம் அவனது கவனம் படிப்பொண்றாக மட்டுமே இருந்தது.

ஆனால் இப்பொழுதெல்லாம் சில நாட்களகவே அவனது இதய வானில் பல பட்டாம் பூச்சிகளை பறக்க விட்டுக் கொண்டிருந்தவள் தார‌ணி.

தாரணி... அமைதியே உருவாண அழகிய அவளது முகம், அடர்ந்த நீண்ட கூந்தல், மெல்லிய தேகம், குழந்தைகளின் சிரிப்பில் தன்னை தொலைக்கும் அவளது குணம், அப்பப்பா...குமரனின் மனத்திரையில் தான் அவளது நிஜப்படம் எத்தனை எத்தனை விதமாய் வார்த்தைகளற்று...


தாரணி, குமரன் படிக்கும் அதே பாடசாலையில் தான் கா.பொ.த (சாதாரண தரம்) கற்கையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவள், அவளும் கிளிநொச்சியையே பிறப்பிடமாக கொண்டிருந்தாள். அவளது தகப்பனார் ஆறுமுகவாணன் அவ்வூரிலே சிறிய பலசரக்கு கடை ஒன்று வைத்து வியாபாரம் நடத்தி வந்தார். தாரணியையும் அவனது அண்ணன் சிவசங்கரனையும் கொண்டதாக பொற்றோருடன் சேர்ந்து அச் சிறியதொரு குடும்பமே அவளது உலகமாக இருந்தது. தாரணி ஆரம்பத்தில் வேறு ஒரு பாடசாலையில் தரம் 10 வரை பயின்று விட்டு O/L பரீட்சைக்காக இப் புதிய பாடசாலைக்கு அறிமுகமாகியிருந்தாள். தாரணியின் அண்ணன் சிவசங்கரன் வேலை காரணமாக யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகி சென்றிருந்தான். தாரணியின் தாயார் ஒரு ஆஸ்துமா நோயாளி, அவரை கவனிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் தாரணியினுடையதாகவே இருந்தது. தனது தகப்பனாரின் கடையில் வேலை தாயின் சேவை இதற்கிடையில் படிப்பு என்று தாரணியின் வாழ்க்கை வட்டம் சுழன்று கொண்டிருந்தது.


தனது தாயார் ஆஸ்துமா நோயால் வேதனைப்படுவதை கண்டு மனம் பொறுக்காதவள் தான் படித்து ஒரு வைத்தியராகி த‌ன‌து தாயின் நோயை குண‌மாக்குவேன் என்று அடிக்க‌டி த‌ன் த‌ந்தையிட‌ம் கூறி வ‌ந்தாள். அதிகாலை 5 ம‌ணிக்கெல்லாம் எழுந்து விடும் ப‌ழ‌க்க‌ம் உள்ள‌ தார‌ணி த‌ன‌து பாட‌சாலைக்கு சைக்கிளிலே சென்று வ‌ந்து கொண்டிருந்தாள். அவ‌ள‌து வீட்டிலிருந்து அவ‌ள் புதிதாய் க‌ல்வி ப‌யிலும் பாட‌சாலை சிறிது தொலைவிலேயே அமைந்திருந்த‌தும் அதற்கு ஒரு கார‌ண‌மாக‌ இருந்தது.

அன்றும் அப்ப‌டித்தான் மாத‌த்தின் முத‌ல் புத‌ன்கிழ‌மை குளித்து நீராடி விட்டு த‌ன் தாயிற்கு செய்ய‌ வேண்டிய‌ க‌ட‌மைக‌ள் அத்த‌னையையும் முடித்து விட்டு அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ பாட‌சாலைக்கு புற‌ப்ப‌ட்டுக் கொண்டிருந்தாள். பாடசாலை தொட‌ங்கும் நேர‌மோ 7.30 இத‌ற்கு சிறிது தாம‌த‌மானாலும் அங்கு த‌ர‌ப்ப‌டும் த‌ண்ட‌னை அவ‌ள‌து ம‌ன‌தில் ப‌ட‌ம் விரித்தாடிய‌து. அந்த‌ ப‌த‌ற்ற‌த்துட‌ன் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ சைக்கிளை மிதித்த‌வ‌ள் எதிரில் வ‌ந்த‌ வ‌ய‌தான‌ ஒருவ‌ருட‌ன் மோதிவிட்டாள். அவர் வேறு யாருமே இல்லை அவ‌ர் தான் தார‌ணியின் வ‌ருங்கால‌ மாம‌னார் என்ப‌தை அவ‌ள் அன்று ச‌ற்றும் அறிந்திருக்க‌ வாய்ப்பில்லை தான்.

அவ‌ருட‌ன் மோதுண்ட‌ அதிர்ச்சியில் த‌ட்டு த‌டுமாறி எழுந்த‌வ‌ள் தான் ஒரு வ‌ய‌தான‌வ‌ருட‌ன் மோதிவிட்டோம் என்ப‌தை அறிந்து அழ‌ ஆர‌ப்பிக்க‌லானாள்.ஆனால் அவ‌ள‌து அதிஷ்ட‌ம் அப் பெரிய‌வ‌ருக்கு எதுவித‌மான‌ சிறு காய‌ங்க‌ள் கூட‌ ஏற்ப‌ட்டிருக்க‌வில்லை. அத‌னை அப் பெரிய‌வ‌ர் அவ‌ளுக்கு ப‌ல‌ முறை எடுத்துக் கூறியும் அவ‌ள‌து அழுகை நின்றபாடாக‌வில்லை. அவ‌ள் அப் பெரிய‌வ‌ரிட‌ம் த‌ன் செய‌லுக்காக‌ ம‌ன்னிப்பு கேட்டு விசும்பிக் கொண்டிருந்தாள். அவ‌ளை ச‌மாதான‌ப் ப‌டுத்தி தோற்ற‌வ‌ரின் முகத்தில் அவளது பள்ளிச் சீருடைகள் மின்னலடித்தன. ஆம் அவரது மகன் குமரன் படிக்கும் அதே பாடசாலைக்குரிய சீருடைகள்.அவர் தனது முகத்தில் சிரிப்பை வரவழைத்து கொண்டவர், தார‌ணியை நோக்கி "அழாத‌ குழ‌ந்த‌, உந்த‌ ப‌ள்ளிக்கூட‌த்தில‌ தான் என்ட‌ ம‌க‌னும் ப‌டிக்கிறான் பேர் கும‌ர‌ன், அவ‌ன்ட‌ அப்ப‌ன் தான் நான். என‌க்கு ஒன்டுமில்லய‌ம்மா உன‌க்கு school தொட‌ங்க‌ போகுது, நீ போம்மா நாளைக்கு நான் என்ட‌ ம‌க‌ன‌ட்ட‌ சொல்லி அனுப்புற‌ன் என்று அவ‌ளை தேற்றி விட்டு புற‌ப்ப‌ட‌லானார் கும‌ர‌னின் த‌ந்தை.


ஆனால் அவ் வார்த்தைக‌ளை கேட்ட‌ தார‌ணியோ விக்கித்து நின்றாள். அவ‌ள‌து காதுக‌ளில் வ‌ந்து நின்ற‌ கும‌ர‌ன் என்ற‌ பெய‌ர் மேலும் அவ‌ளை ப‌ய‌முறுத்துவ‌தாக‌வே அம‌ந்திருந்த‌து. ஏனெனில், கும‌ர‌ன் அவ‌ள‌து பாட‌சாலையில் ந‌ன்கு அறிய‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ன். கார‌ண‌ம் அவ‌ன் தான் அப் பாட‌சாலையின் மாண‌வ‌த் த‌லைவ‌ன். ப‌டிப்பிலும் ச‌ரி விளையாட்டிலும் ச‌ரி அவ‌னை மிஞ்ச‌ ஆளே இல்லை என்று அடிக்க‌டி அவ‌ள‌து வ‌குப்புத்தோழிக‌ளின் வாயால் கும‌ர‌ன் புராண‌ம் பாட‌க் கேட்டுள்ளாள். ஆக‌வே வ‌ர‌ப்போகும் நாளை எப்ப‌டி இருக்குமோ என்ற க‌ல‌க்க‌ம் அவ‌ளை வெகுவாக‌ வாட்டிய‌து. தாம‌த‌மான‌ இன்றைய‌ நாளால் பாட‌ச்சாலைக்கு செல்ல‌முடியாம‌ல் போன‌தால் வீடு திரும்பியதால் த‌ன் த‌ந்தையிட‌ம் ந‌ன்றாக‌ வாங்கிக் க‌ட்டிக் கொண்டு த‌ன‌க்கு விருப்ப‌மான‌ த‌மிழ் பாட‌த்தை எடுத்து ப‌டிக்க‌லானாள்.


ஆனால் எங்கே ப‌டிப்பு வ‌ந்த‌து, கும‌ர‌ன் தான் வ‌ந்தான். ஏன் என் அப்பாவை விழுத்தாட்டினாய் என்று அத‌ட்ட‌வும் செய்தான். அதே ப‌ய‌த்துட‌னே உற‌ங்கியும் போனாள் தார‌ணி.


‌றுநாள் பொழுதும் புல‌ர்ந்த‌து, ஆனால் நேற்றைய‌ க‌வ‌லை ம‌ற‌ந்திருக்க‌வில்லை. நேற்ற‌ய‌ நாளின் தாம‌த‌த்தினால் ஏற்ப‌ட்ட‌ விப‌த்து ஞாபகத்திற்கு வ‌ர‌வும் இன்றைய‌ தின‌ம் த‌ன‌து வேலைக‌ளை வெகு சீக்கிர‌மாக‌வே முடித்துக் கொண்டு புற‌ப்ப‌ட‌லானாள் தாரணி.

ஆனால் அன்றைய தினம் பாட‌சாலையில் கும‌ர‌னை எங்கு தேடியும் க‌ண்டு பிடிக்க‌ முடிய‌வில்லை அவ‌ளால். நேற்று நினைவ‌லைக‌ளில் அப்ப‌டியும் இப்ப‌டியுமாக‌ வ‌ந்து ப‌ய‌முறுத்திய‌வ‌னை இன்று காண‌வில்லை. அவ‌னைக் காண‌வில்லை என்ற‌தும் தார‌ணியின் ப‌ய‌ம் மேலும் அதிக‌ரித்த‌து. பாட‌சாலை தொட‌ங்கி இடைவேளை ம‌ணியும் அடித்த‌து, த‌ன‌க்குரிய‌ உண‌வை எடுத்துக் கொண்டு த‌ன‌து தோழிக‌ளுட‌ன் சேர்ந்து நேற்றைய‌ ச‌ம்ப‌வ‌த்தை அர‌ட்டை அடித்த‌வாறே உண்ண த‌யாரானாள். அப்போது ஒரு குர‌ல், க‌ம்பீர‌மான‌ ஒரு குர‌ல் Excuse Me! இங்க‌ தார‌ணி...?
அக் குரல் கேட்டதுதான் தாமதம் அக் குரல் வந்த திசையை நேக்கு மின்னலென திரும்பினாள் தாரணி. ஆனால் அங்கே முகத்தில் புன் சிரிப்புக்களுடன் இரு கைகளையும் குறுக்கே கட்டியபடி அவளை நேக்கி நின்றான் குமரன்.
தொடரும்...