கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 26, 2010

சிலிர்த்துக் கொள்கிறேன் காத‌லை நினைத்து!



காத‌லித்த‌வுட‌ன் காண்போரில் எல்லாம்


காத‌லியின் உருவ‌ம் வ‌ந்து போகும்


சினிமா பித‌ற்ற‌ல்களைப் பார்த்து சிரித்துக்


கொண்ட‌து அந்த‌க் கால‌ம்; ஆனால் உன்னைக்


காத‌லித்த‌ பின்பு எல்லோர் முக‌ங்க‌ளும் நீ போல் தோன்ற‌


சிலிர்த்துக் கொள்கிறேன் காத‌லை நினைத்து!

நான் நீ காதல்!







உன்னை நினைத்துக் கொண்டிருப்ப‌தாலேயே

வீணாக‌ப் போகின்ற‌தென் வாழ் நாட‌க‌ள்

என‌ திட்டுப‌வ‌ர்க‌ளுக்கெல்லாம் புரிய‌வா போகின்ற‌து

என்னை வாழ‌ வைத்துக் கொண்டிருப்ப‌தே உன் நினைவுக‌ள் தானென்று!

இதயமே இல்லையா காதலுக்கு?





இதயமே இல்லையா காதலுக்கு?


இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே;

வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்!

சனி, நவம்பர் 21, 2009

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!






இமைகள் தாழ்ந்தன‌
விழிகள் அழுதன
என் முக‌ம் நோக்காத‌ உன் பார்வையினால்!







என் கண்களில் நான் நாணம் கொண்டேன்
உன் மேல் நானும் காதல் கொண்டேன்
மனச் சிறையில் அதனை ஒளித்து வைத்தேன்
ஆனால் விழித் திரையில் படமாய் விரிந்ததடா!










க‌ண் நிறைய‌க் காத‌ல்
ம‌ன‌ம் நிறைய‌ நேச‌ம்
நீ இல்லாத‌ தேச‌மோ நான் என்றுமே வாழ‌ விரும்பாத‌ என்

வாச‌ம்!








என் முகத்தை திரைச்சீலை போட்டு மறைத்தாலும்
என் விழிப் பார்வை காட்டிக் கொடுத்து விடுகிறதே
உன் மீதான என் காதலை!





அடி போடி கள்ளி
உன் முறைத்த விழிப் பார்வைகள் கூட‌
நம் காதலை சொல்லிவிடும் தாஜ்மகால் சிற்ப‌ங்க‌ள்!







க‌ண்க‌ளிலோ வெட்க‌ம்
முக‌த்திலோ காத‌ல்
இத‌ய‌ம் முழுவ‌துமோ நீ!






கண்களால் உனை தேடுகிறேன்
நீ என் இதயத்துள் இருப்பதை மறந்து விட்டு!





எல்லோர் க‌ண்க‌ளிலும் பெரிய‌வ‌னாய் தெரியும் நீ
என் க‌ண்க‌ளில் மட்டும் ஏன‌டா சிறு குழ‌ந்தையாய் ம‌ட்டுமே
தெரிகிறாய்?





உன் மீது நான் கொண்ட‌ காதலை
யாரிட‌மும் சொல்லாதே என்று என்‍
ந‌ண்பியிட‌ம் சொல்ல‌த் தெரிந்த‌ என‌க்கு
என் க‌ண்க‌ளிட‌ம் சொல்ல‌த் தெரிய‌வில்லையே
பார் எப்ப‌டி காட்டிக் கொடுத்து விடுகின்ற‌ன‌ ந‌ம் காத‌லை!





உன் பார்வை அம்புக‌ளால் நீ என்னை கொலை செய்யும்


போதெல்லாம்;


என் இத‌ய‌ம் புதுப் பிற‌ப்பு அடைகின்றதே தோழி!









காத‌லிடம் இருந்து தான் பிற‌ந்து கொண்ட‌தா வெட்க‌ம்?

உன் மேல் நான் காத‌ல் கொண்ட‌தும்

என் க‌ண்க‌ள் வெட்க‌ப் பூக்க‌ளை அணிந்து கொண்ட‌ன‌வே!





என்றுமே விடுதலையாக‌ விரும்ப‌வில்லை

உன் விழிச்சிறையில் அக‌ப்பட்டுக் கொண்ட பின்ன‌ர்!




காற்றிட‌ம் இருந்து கூட‌ த‌ப்பி விட‌லாம் நீ
ஆனால் என் க‌ண் அசைவிலிருந்து த‌ப்ப‌ முடியாத‌ ப‌டிக்கு என்

காத‌ல்!







நம் காதலில் தானடி
இதயங்கள் பேசிக்கொண்டன‌
கண்கள் நேசிக்க கற்றுக் கொண்டன!

ஞாயிறு, அக்டோபர் 11, 2009

பறக்க எனக்கும் ஆசைதான்!












பறக்க எனக்கும் ஆசைதான்,
ஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட குருவி!



எம்பிக் குதித்து வானத்தில் பற்ந்து
வட்ட மிட்டு வலம் வந்து
பின் தரையை நோக்கி விழுந்து
மரக்கிளைகளில் தாவி அங்கும் இங்கும் ஓடி
அலைந்து மழையில் நனைந்து
கும்மாளம் அடித்து குதூகலித்து
பின் மீண்டும் பறக்க எனக்கும ஆசை தான்
ஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட‌ குருவி!



என் நண்பர்கள் போல் இரைதேடி அலைந்து
களைப்புற்று கூடு திரும்பி
என் மனைவி மக்களுடன் உண்டு குடித்து மகிழ்ந்து
அவர்கள் உண்பதை ரசித்து; க‌ர்வ‌ப்ப‌ட்டு
பின் ப‌றந்து மாலை வேளை உணவு தேடி
மீண்டும் மீண்டும் க‌ளைப்புற்று ,என்
கூடு திரும்ப‌ என‌க்கும் ஆசை தான்
ஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட குருவி!


இவ் விண்வெளி எங்கும் ப‌ற‌ந்து
க‌ண்ட‌ம் விட்டு க‌ண்ட‌ம் தாண்டி
அளாவ‌ளாவி சிலிர்ப்புற்று,
ம‌லை மேடு முகில் தாண்டி
ச‌ம‌த‌ரைக‌ள் எங்கும் ப‌ற‌ந்து திரிந்து
இய‌ற்கையை ர‌சித்து இன்ப‌த்தில் திழைத்து
இதமாய் பொழுது போக்க என‌க்கும் ஆசைதான்,
ஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட‌ குருவி!



இவ் வீட்டின் எஜமான் என்னை வாங்கி வந்தார் ஆசையாய்
தன்னாசை மகள் கேட்டதற்காய், ஆனால்
அவ‌ரோ அறிந்திருக்க‌வில்லை என்னாசை
ப‌ற‌க்கும் ஆசை என‌. ஏனெனில்;
நானோ கூண்டுக்குள் அடைப‌ட்ட‌ குருவி!




தாய் சொன்னார் போதும் இச் சிறு கூடு என‌
ம‌க‌ள் சொன்னார் இல்லை இன்னும் பெரிதாய் வேண்டும்
என் குருவி சுத‌ந்திர‌மாய் ந‌ட‌மாட‌ என
எது என் சுத‌ந்திர‌ம்???..... தெரியாத‌
இவ் வேடிக்கை ம‌னித‌ர்க‌ளுக்காக‌
வேடிக்கை பொருளாகிவிட்ட‌ நானோ;
கூண்டுக்குள் அடைப‌ட்ட‌ குருவி!

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009

இப்படிக்கு நாங்கள்!






பசிக்குது ஏனக்கு
பசியாற எதுவுமில்லை


பச்சத் தண்ணி குடிச்சதால
பல நோய்கள் வந்து போய்று

பாடப் புத்தகம் தூக்கினாலோ
பள்ளி ஞாபகங்கள் கண்ணை நனைக்குது

பனை ஓலை கிடுகு வடலி
பம்பரம் ஊஞ்சலாட்டம் கிளித்தட்டு

பசுமையான நினைவுகள் யாவும்
பாழாய் போய் நாட்கள் ஆயிட்டு;

பசிக்குது எனக்கு இப்ப‌
பசியாற எதுவும் இல்லை

பச்சை மரத்தடி வகுப்பறை
பாடங்கள் இங்கு நடக்குதிங்கு

பார்ப்பவை நினைப்பினம் எம் வாழ்வு
பரவாயில்லை ஏதோ போகுதென்று

படும் கஷ்டம் நாங்கள் அன்றோ
பார்ப்பவர் உமக்கா விளங்க போகுது?



பழைய‌‌ எம் இழ‌ந்த‌ வாழ்வை
பரிதவிக்கும் எமக்கு மீட்டுத் த‌ர இய‌லும‌ன்றோ...?



இப்ப‌டிக்கு நாங்க‌ள்,

பரித‌விக்க‌ விட‌ப்ப‌ட்ட‌ ஈழ‌ ம‌க்க‌ள்!

சனி, ஆகஸ்ட் 08, 2009

அக்கா அண்ணா நம்மள கொஞ்சம் நினைச்சுப் பாருங்க!







சொந்த நாட்டில் அகதிகள் நாம்
சொல்லொண்ணா துயரம் அது நம் சொத்துக்கள் தாம்


பட்டினி வாழ்வு அது இப்போ எம்முடன் தான்
பகலும் இரவும் நம் பொழுது இப் படலைகளில் தான்


சுத்தமான தண்ணீர் அது நாம் கண்டு கன நாளாச்சு
சுகந்த வாழ்வு அது இனி எமக்கு கணவில் தான்


அப்பா அம்மா அவர்கள் எங்கே அடுத்த முகாமிலா?
ஆமிக்காரன் சொன்னான் நாம் இனி அனாதைகளாம்?


வெளியில் இருக்கும் அக்கா அண்ணா நம்மள கொஞ்சம்

நினைச்சுப் பாருங்க

வேற்றுக் கிரக மனிதரில்லை நாமும் உங்கள் உடன் பிறப்புக்கள்

தான்!

செவ்வாய், ஜூலை 14, 2009

உன் மெளனங்களின் மொழி...





உன் மெளனங்களை எல்லாம் மொழி பெயர்த்தேன்

அட அதில் என் பெயர் மட்டும் தான் ஒலித்துக்

கொண்டிருந்தது!







இன்று காதல் தேசத்தின் பெருவிழாவாம்

ஆமாம் இன்று தான் நீ முதன் முதலில் காதலில்


நுழைந்த நாளாம்...









உன் முகத்தில் இத்தனை வானிலை மாற்றங்களா?


காரணம் காதல் தானோ?

வெள்ளி, ஜூன் 19, 2009

எனக்கென்றொரு தேவதை...




உன் வாசம் வீசும் பாதையில் தான்

என் சுவாசம் செல்ல துடிக்கின்றது...





ஒரு நொடிப் பொழுது கூட எனக்கு வேண்டாம்

உன் கண்ணிமைப் பொழுதென்றை தவிர‌...





வாழத்துடிக்கிறேன் இல்லையேல் செத்து போகிறேன்

உன் காதல் கடலில்...





த‌ங்க‌த்தை விட‌ வைர‌ம் விலை உயர்ந்த‌தாமே

யார‌டி சொன்னார்க‌ள் உன் பெருமை

அறியாதவர்கள்...



எவ் ந‌கையும் சிற‌க்க‌வில்லைய‌டி என‌க்கு

உன் புன்னகையை தவிர‌...





சனி, மே 16, 2009

எல்லாம் காதலினால்...





உன் நினைவுகளை சுமந்த படி தான்

எப்பொழுதும் என் இதயம்..








உன் அன்பு பேச்சுக்களை மட்டுமல்ல‌

உன் கோப வார்த்தைகளையும் தான்

ரசிக்கிறது என் மனது...






இப்பொழுதே கனவு கான ஆரம்பித்து விடுகிறேன்

உன்னை எப்படியெல்லாம் பெரிய ஆள் ஆக்க

வேண்டுமென்று!








உன் சிரிப்பு

உன் கோபம்

உன் பாசம்

உன் பந்தம்

ஐயோ உன்னை முழுவதுமாக பிடித்து போகின்றதே


எனக்கு







நீ ஒவ்வொரு முறையும் என்னவென்று கேட்கும்

போதெல்லாம் எனக்கு மறந்து போய் விடுகின்றது

நான் என்னவெல்லாம் உன்னிடம் பேச வேண்டுமென்று ?







எப்பொழுதும் உன்னிடம் மட்டும் தான்

பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்று அழிச்சாட்டியம்

பண்ணும் மனதை நான் என்ன செய்வது?









எல்லாவற்றையும் உன்னிடம் தான் சொல்ல வேண்டும்



துடிக்கிறது என் இதயம்...













புதன், மார்ச் 18, 2009

ஒரு தியாகியின் பதிவேடுகளிலிருந்து...


ஒவ்வொரு முறை நான் தோற்கும் போதும்
உறுதி எடுத்துக் கொள்வேன் மற்றவன்
நன்றாக வாழ வேண்டுமென்று


என் இரத்தத் துளிகளெல்லாம் இம் மண்ணில்
சிதறுண்ட போதும் நான் பேருவகை கொள்வேன்
என் இனத்தின் வியர்வைத் துளிகள் இங்கு பயிரிடப்பட வேண்டுமென்று


என் சந்ததியெல்லாம் வேரறுக்கப்படும் போதும்
நான் திடசங்கற்பம் பூணுவேன் வரும்
சந்ததியாவது தழைத்தோங்க வேண்டுமென்று


என் பாதைகளெங்கும் முட்கள் சூழ்ந்த போதும்
நான் மன உறுதி கொள்வேன் நாளை என்
மக்கள் நீங்கள் நலமுடனே வாழவேண்டுமென்று!

வெள்ளி, பிப்ரவரி 27, 2009

இனியும் வேண்டாமே! (கண்ணீர் துளிகளுடன்)




நேற்று முத்துகுமார்
இன்று அமரேசன்
நாளை ??????


இனியும் வேண்டாமே
இன்னொரு தீக்குளிப்பு
இதயம் தாங்கவில்லை
இடிந்த உம் வாழ்வு கேட்டு

துஷ்டர் நிறை இவ்வுலகில்
துன்பமான செய்தி கேட்டு
துறக்க நினைக்கும் உம் உயிரை
தூசாக தான் நினைத்தனரே

கஷ்டப்பட்டு கதறி அழும்
உம் குடும்பம் காண்பீரோ
கருனைப் பட்டு எங்கள் மேல்
உயிர் துறக்க துணிந்தீரோ

இஷ்டப்பட்டு உம் சாவை
ஏற்கவில்லை எம் மனங்கள்
நஷ்டப்பட்டு நிற்பதெனவோ
எம் தமிழ் இனம் தான் பாரீரோ

போர்களமாம் ரணகளத்தில்
பொஸ்பரஸ் குண்டு எமை அழிக்க‌
போதும் இவ் யுத்தம் என்று
உம் சாவை நீர் அணைக்க‌


கண்ணீர் தான் மிஞ்சிடுமோ
கவலை தான் எஞ்சிடுமோ
வேண்டாமே இனி எமக்கு
இரு புறமும் உயிரிழப்பு!

புதன், பிப்ரவரி 25, 2009

எல்லாப் புகழும் அவன் ஒருவனுக்கே!


ஒஸ்காரின் நாயகனே
சாதனையின் காவியனே
உலகமெங்கும் உன் பெயர்
உவகையுடன் உதிர்த்து விட‌
களிப்புடனே நாம் கூறுகிறோம்
Congratulation!



இசையாய் வாழ்பவனே
இமையமாய் உயர்பவனே

விண்ணெல்லாம் உன் புகழ்
விடிவெள்ளியாய் ஒளி பரப்ப‌
பெருமையுடன் நாம் கூறிடுவோம்
Best Wishes!




தென் இந்தியாவில் மலர்ந்தவனே
தேனமுதாய் பொழிபவனே
இதயமெங்கும் உன் இசை
இன்பமாய் இடி முழங்க
கீதமுடன் நாம் கூறிடலாம்
Greetings For You!




உன் அன்னை உளம் மகிழ‌
உறவெல்லாம் உடன் சிறக்க‌
நெஞ்சமெல்லாம் உன் உருவம்
நெடிது காலம் நிலை பெறவே
கொண்டாடி மகிழ்ந்து நாம் கூறுகின்றோம்
God Bless You!


வெள்ளி, பிப்ரவரி 20, 2009

எனக்கான நீ...


எனக்கான நீ இன்னமும் என் மனக்கூட்டிற்குள்
பத்திரமாய்
என் நினைவலைகளில் தினம் தினம் என்னுடனே...


என் சின்ன சின்ன சந்தோஷங்களின் பொழுதும்,
என் பெரிய சோகங்களின் பொழுதும்,
என் செல்லக் குறும்புகளின் பொழுதும்,
எனக்கான நீ இன்னமும் என் மனக்கூட்டிற்குள்

பத்திரமாய்


அதிகாலை வேளைகளில் நான் உன் பெயரை
உச்சரிக்கும் பொழுதும்
அந்தி மாலை நேர‌ங்க‌ளில் என் உறக்கக்
கனவுகளின் போதும்
என‌க்கான‌ நீ இன்னமும் என் ம‌ன‌க்கூட்டிற்குள்
‌த்திர‌மாய்


என் வாழ்க்கையின் ஒவ்வொரு த‌ருண‌ங்க‌ளின்
பொழுதும்
என் வீட்டிற்குள் நான் வாச‌ம் செய்யும் என்
அலுவல்களின் போதும்
என‌க்கான‌ நீ இன்ன‌மும் என் ம‌ன‌க்கூட்டிற்குள்
‌த்திர‌மாய்

நொடுஞ்சாலை வீதிக‌ளில் நான் ந‌ட‌ந்து செல்லும்
பொழுதும்
நீண்ட‌ தூர‌ என் பிரயாணங்களின் போதும்
என‌க்கான‌ நீ இன்ன‌மும் என் ம‌ன‌க்கூட்டிற்குள்

பத்திர‌மாய்

என் ஒவ்வொரு நொடிப்பொழுது த‌னினும்
எனக்கான நீ என்னுடனே என் நினைவலைகளில்...
என்றென்றும் என் மனக்கூட்டிற்க்குள் இன்னமும்
பத்திரமாய்
உன‌க்கான‌ நான் உன் இத‌ய‌ வாச‌ல் த‌னிலும்
இல்லாத‌ போதும்...

புதன், பிப்ரவரி 18, 2009

ச்ச்சீசீதனம்...


பொன் வேண்டும்,
பொருள் வேண்டும் என்பர்,
பெண் பாவை தாம் எமை வரன் கேட்பார்...

சீர் வேண்டும்,
சொத்து வேண்டும் என்பர்,
சிறப்புடனே நாம் வாழ்ந்திடவே என்பர்...

கார் வேண்டும்,
கனக்க வேண்டும் என்பர்,
கண்மணியே உனை கருத்தோடு காத்திடுவேன்
என்பர்...

ஆனாலும் எம்ம‌வ‌ரே...

பொன் வேண்டாம்
பொருள் வேண்டாம்

சீர் வேண்டாம்
சொத்தும் வேண்டாம்

கார் வேண்டாம்
கன‌க்க‌வும் வேண்டாம்

உம‌த‌ன்பு ஒன்றே போதுமே எமக்கு,
உயிரென‌ நாம் உம‌க்காய் வாழ்ந்திட‌வே...

புதன், பிப்ரவரி 11, 2009

என்ன‌ நான் சொல்லுற‌து...?


ஒண்டும் விளங்குதில்ல...?
எங்கட பாழாய் போன லங்கா தேசத்தில;
என்ன நான் சொல்லுறது;
எல்லாம் எங்கட "வற்"றிட வளர்ச்சி பற்றித்
தானுங்கோ...

ஒருக்கா கூடுமென்பர்,
ஒருக்கா குறையுமென்பர்,
ஆனா ஒண்டையுமே காணம்...?
எங்கட பொருட்கள்ட விலையேற்றம் தவிர,


முதல்ல 15% ம்,,,
பிற‌கு 13% ம்,,,
இப்ப 12% ம்,,,
ஆனா என்னண்ட‌ என‌க்குப் பார்த்தா,
இப்ப‌ ஏதோ 16% மாதிரிக் கிட‌க்கு
அப்ப‌டி இருக்கு சந்தைல‌ சாமான்ட‌
விலையெல்லாம்.

கேட்டா ஏதோ Nation Building Tax ஆம்...?
ஓமோம் ஓமோம் ந‌ல்ல‌ ப‌க‌டிதான் பாருங்க‌;
இங்கால‌ ஒரு ப‌க்க‌ம் Nation People Distroyed
அங்கால‌ ஒரு ப‌க்க‌ம் Nation Build Up ந‌ட‌க்குது
போல‌,

யாருக்கு தான் விள‌ங்குமோ;
எங்க‌ட‌ பெரிய‌ ம‌னுச‌ன் ம‌ஹிந்த‌வின்
சிந்த‌னைக‌ள்...?

ஞாயிறு, பிப்ரவரி 08, 2009

கேட்கவில்லையோ எம் குரல்.....?


சர்வதேச சமூகமே...,
ஏனிந்த மொளனம்...?
ஏனிந்த பாராமுகம்...?
கேட்கவில்லையோ எம் குரல்...?
காணவில்லையோ நம் மக்களின்
படுகொலைகளை ...?

தீக்குளித்தோம்,
உண்ணா நோன்பிருந்தோம்,
மனித சங்கிலியாய் களம் கண்டோம்,
ஆனாலும் பயனில்லையோ...?
அது உம் செவி தனில் படவில்லையோ...?


தந்தி வழி மனுக்கொடுத்தோம்,
தகவல்கள் பலவும் தந்தோம்,
த‌ர‌ணியெங்கும் தமிழர்கள் நாம் த‌யை கேட்டோம்,
ஆனாலும் த‌ய‌க்க‌மேன் உம‌க்கு...?
த‌ட‌ய‌ங்க‌ள் உறைக்க‌வில்லையோ உமதண்டை...?


கால‌ம் தாழ்த்தி ப‌தில் சொல்லிய‌,
க‌றை ப‌டிந்த‌ வ‌ர‌லாறு உம‌க்கு வேண்டாம்...
க‌ல‌ங்கி நிற்கும் எம் ம‌க்க‌ளின்
க‌த‌ற‌ல்க‌ளை க‌ண் பாரும்.


ஏனெனில்; நாளை ந‌ம் ச‌மூக‌த்தின்
க‌ல்ல‌றைக‌ளில் உம் பெய‌ரும் சாப‌மாய்
ஒலிக்குமுன்........

வெள்ளி, பிப்ரவரி 06, 2009

உங்க‌ளோடு தான் நாமும்...


தினம் தினம் உங்கள் இன்னல்கள் கண்டு
நாங்களும் அழுகின்றோம்;
எங்கள் அகக் கண்களில் என்நேரமும் நீங்கள்
எங்களோடு தான்,

உங்கள் சோகங்கள்,
உங்கள் கதறல்கள்,
உங்கள் காயங்கள்,
உங்கள் வலிகள்,

ஐயகோ!.....எங்களுக்கு கேட்காமலில்லை,,,,

உங்கள் உடற் புண்கள்;
எங்கள் மனப் புண்கள்.


உங்களின் குமுறல்கள்;
எங்களின் இதயத்துடிப்பு.


உங்களின் வேதனை;
எங்களின் பெருமூச்சு.

யாருக்கில்லை கவலை உங்கள் இன் நிலை
கண்டு.....,,?
யாருக்கில்லை கோபம் தமிழன் தான் படும் துயர்
க‌ண்டு...,,,,,?

உட‌லால் தொலைவாகிப் போனாலும்...
உற‌வால் நானும் நீயும் ஒரு தாய்
பிள்ளைக‌ள‌ன்றோ.....?

நீங்க‌ள் தான் எங்க‌ள் உண‌ர்வு,,,
நீங்க‌ள் தான் எங்க‌ள் உற‌வு,,,
நீங்க‌ள் தான் எங்க‌ள் பாசம்,,,
நீங்க‌ள் தான் எங்க‌ள் நேச‌ம் அன்றோ.....,,, ?


ஆனாலும்,,,
நீங்க‌ள் உங்க‌ள் உட‌லால் ம‌ரிக்கிறீர்க‌ள்,,,
நாங்க‌ள்......?????
உங்க‌ள் உணர்வுக‌ளால் மரிக்கின்றோம் தின‌ம்
தின‌ம்.....

திங்கள், அக்டோபர் 06, 2008

யாமறியோம் பராபரமே!



யார் துடைப்பார் இத் துயரை
எவ்வழி காண்போம் நம் உறவை
காணாமற் போதல் கதையாகிப் போன
எம் தேசத்தில்
எத்தனை வழிகளில் முயன்றோம்
அத்தனையும் பொய்யெனவே ஆயினவே,

மனுக்கொடுத்தோம் புகார் புரிந்தோம் -
இருந்தும்
மனுநீதிச் சோழனில்லையே நம் நாட்டில்

விடிய விடிய காத்திருந்தும்
விடியவில்லையே எம் பொழுது

ஒரு தாயின் விசும்பல்
ஒரு தாரத்தின் கதறல்
ஒரு குழந்தையின் கண்ணீர்
ம்........யாருக்கு அது வேண்டும் இப்
யு(பு)த்த பூமியில் ???

ஏன் எதற்கு என்ற கேள்வியில்லை
நாம் கேட்டால் அது நன்றும் இல்லை
யார் புரிவார் இச் செயலை
யாமறியோம் பராபரமே!

சனி, ஜூன் 07, 2008

ஏனோ.................?


65610 சதுர km பரப்பளவே கொண்ட அழகிய
குட்டித் தீவு நீ,
இந்து சமுத்திரத்தின் நித்திலம் நீ,
இயற்கை துறைமுகத்தால் புகழ் பெற்று விளங்கும்,
கேந்திர மத்திய நிலையமும் நீ.

ஆசியாவிலேயே எழுத்தறிவு வீதத்தில் உனக்கு
தனிச்சிறப்பு,
உலகிலேயே கண்தானம் செய்வதிலும் உனக்கு
முதற்சிறப்பு.

காசியப்பன் ஆண்ட பூமி நீ,
கருணை நிறை புத்த மதம் உன் தார்மீகம்.

விபுலானந்த அடிகள் பிறந்ததும் இங்கே தான்,
அன்பு நிறை யோசவ்வாஸ் மாமுனி மறை
பரப்பியதும் உன்னில் தான்.
கிரிக்கெட்டில் புகழ் உனக்கு,
பெரும் தோட்ட தேயிலை பயிர்ச் செய்கை
பலம் உனக்கு.


மாணிக்க கல் விளையும் பூமி நீ,
மலை வளங்களும் உன்னில் பிரமாதம்.

இவை எல்லாம் கொண்டு சிறப்புற்று
விளங்கும் நீ,,,

கொலைகளும் தற்கொலைகளும் மலிந்த,
இரத்த ஆறு கரைபுரண்டோடும்
ஓர் யுத்த பூமியாகவே எல்லோராலும்
அறியப்படுகின்றாயே அது ஏனோ........?