திங்கள், செப்டம்பர் 07, 2009

ஊனம் யாருங்க...?


நான் படித்த பாடசாலையில் ஒரு சகோதரி இருந்தார். அவர்களும் என்னைப் போல் ஒரு மாணவி தான். ஆனால் அவவிற்கு ஒரு கை வளர்ச்சி அடையாத நிலையில் காணப்பட்டது. நான் அம் மாணவியை கவனித்திருக்கிறேன் அவர் எப்பொழுதும் தனியாக இருந்ததாக தான் எனக்கு ஞாபகம். அவர் எப்பொழுதும் எங்கள் எல்லோரையும் பார்த்து அழகாக ஒரு புன்னகை செய்வார். அடிக்கடி அவாவை பாடசாலையில் காண்பதாலோ என்னவே அது எங்களுக்கொரு பெரிய வித்தியாசமாகப் படவில்லை. ஆனால் நாங்கள் யாரும் அவவுடன் பெரிய நட்பு வைத்து கொண்டதாகவோ அல்லது அம் மாணவியின் வகுப்பு பிள்ளைகள் யாரும் அவருடன் நண்பிகளாய் பழகினதையோ நான் காண்டதில்லை. இது ஏன்? அவருடன் நட்பு வைத்துக் கொள்வதை நாங்களோ அல்லது அவரின் வகுப்பு மாணவர்களோ கொளரவ குறைச்சலாக கருதினதாலா?

பொதுவாக நாம் எல்லோரும் என்ன நினைப்போம் எங்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்க வேண்டும் அவர்கள் எப்போதும் எங்களுடன் அன்பாக இருக்க வேண்டும் மதிக்க வேண்டும் என்றெல்லாம் தானே? எல்லோரும் சேர்ந்து விளையாடும் போதோ இல்லை கல்வி கற்கும் போதோ நாம் மட்டும் தனித்து விடப்பட்டால் எங்களது மனநிலை எப்படி பட்டதாக இருக்கும்? அதே போல் தானே அவர்களது மன நிலையும் இருக்கும். இதை நாம் ஏன் சற்றும் சிந்திப்பதில்லை? சற்று நிதானமாக சிந்திப்போமானால் நாங்கள் அவர்களோடு நட்பு வைத்துக் கொள்ள விரும்பாதது மட்டுமன்றி அவர்களை ஏதோ மனிதர்களே இல்லாதது போல் பிரித்து வைப்பது அவர்கள் மனதில் ஒரு வேதனையை விரக்தியை தாழ்வு மனப்பாண்மையை உருவாக்கும் என்பதை நாங்கள் ஏன் யாருமே ஒருபோதும் உணர்ந்து கொள்வதில்லை? இதில் உண்மையான ஊனர்கள் யார்? நாங்களா? இல்லை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு எப்பொழுதும் ஒரு புண்ணகையுடன் வலம் அச் சகோதரியா?

என‌க்கு ஒரு நண்பி இருந்தார், இப்ப‌வும் இருக்கிறா. என் உயிர்த் தோழி என‌றே கூற‌லாம். அவ‌விற்கு ஒரு அக்கா. என் ந‌ண்பியை ஒரு தேவ‌தை போல் ப‌டைத்த‌ இறைவ‌ன் என் ந‌ண்பியின் ச‌கோத‌ரியை மூளை வ‌ள‌ர்ச்சியற்ற (ம‌ன்னிக்க‌வும்) ஒரு பிள்ளையாக‌ இவ் வுல‌கில் அவ‌த‌ரிக்க‌ விட்டு விட்டான். ஆனால் அவ‌ர்க‌ளுக்கு ஒரு அம்மா, இல்லை இல்லை அத‌ற்கும் மேல். அவ‌ர்க‌ள் என்ன‌ சொல்வார்க‌ள் தெரியுமா? " க‌ட‌விளிற்கு தெரியும் யாருக்கு என்ன‌ பிள்ளை கொடுக்க‌ வேண்டு மென்று, அதனால் தான் அந்த‌ இறைவ‌ன் என‌க்கு இப் பிள்ளைய‌ கொடுத்திருக்கிறான். வேறு யாருடைய‌ கைக‌ளிலாவ‌து இப் பிள்ளை கிடைத்திருந்தால் என்ன‌ பாடுப‌டும், நான் ந‌ன்றாக‌ வ‌ள‌ர்ப்பேன் என்று தெரிந்து தான் க‌ட‌வுள் என‌க்கு இப் பிள்ளையை த‌ந்துள்ளார்" என‌க் கூறுவார். இப்ப‌டி ஒரு அற்புத‌மான‌ தாயை நீங்கள் எங்காவ‌து க‌ண்ட‌துண்டோ?


சாதார‌ண‌மாக‌ ஒரு ம‌னித‌னை எடுத்து கொண்டோமேயானால் அவ‌ன‌து சிந்த‌னை செய‌ற்பாடுக‌ள் எப்ப‌டிப் ப‌ட்ட‌தாக‌ இருக்கும்? நாங்க‌ள் அழ‌காக இருக்க‌ வேண்டும், நாம் ம‌ற்ற‌வ‌ரை க‌வ‌ரும் வ‌ண்ண‌ம் இருக்க‌ வேண்டும் எங்க‌ளை எல்லோருக்கும் பிடிக்க‌ வேண்டும் என்ப‌தாக‌ப் ப‌ற்றித் தானே? ச‌ரி அதை தான் விடுங்க‌ளேன் இப்பொழுது ஒரு பெண்ணோ அல்ல‌து பைய‌னுக்கோ திரும‌ண‌ வ‌ர‌ண்க‌ள் பார்க்கும் பொழுது நாம் என்ன‌ சொல்கின்றோம் இந்த‌ப் பொண்ணுக்கு மூக்கு கொஞ்ச‌ம் ச‌ப்பை, அந்த‌ப் பொடிய‌னுக்கு த‌லையில‌ மொட்டையே விழுந்திடிச்சு. இவ்வாறாக‌ நிற‌ம், உய‌ர‌ம், ப‌ரும‌ன் அப்ப‌ப்பா... எல்லாவ‌ற்றிலும் அல்ல‌வா குறைக‌ள் க‌ண்டு பிடிக்கிறோம்? அவ‌ர்க‌ளை நிராக‌ரிக்கின்றோம். இப்ப‌டி உட‌ல் உள‌ ஆரோக்கிய‌த்துட‌ன் வாழ்ப‌வ‌ர்களிலேயே ஆயிரம் குறைக‌ள் க‌ண்டு நிராக‌ரிக்கும் நாங‌க‌ள் இவ்வாறு உட‌ல் ரீதியாக‌ ஊனமுற்றவர்களை எம‌து அன்புக்குரிய‌வ‌ர்க‌ளாக‌ ஏற்றுக் கொண்டு வாழ‌த் த‌யாராக‌ உள்ளோமா?


என‌து அலுவ‌ல‌க‌த்தில் ப‌ணி புரியும் சிங்க‌ள ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் ஒருமுறை என்னிட‌ம் கூறினார் த‌ன‌து தோழி ஒருத்தி ப‌டைப்பிரிவில் இருக்கும் இரு கால்க‌ளையும் இழ‌ந்த‌ ஒருவ‌ரை விரும்பி திரும‌ண‌ம் முடித்தாக‌. தான் ஏன் என்று கேட்ட‌ வேளை உண்மையான‌ அன்பென்ப‌து இதில் தான் உள்ளதாக‌வும் தான் அவ‌ரை ம‌ன‌மார‌ நேசிப்ப‌தாக‌வும் கூறினாராம். என‌க்கு அப்பொழுது அச் ச‌ம்ப‌வ‌ம் பெரிதாக‌த் தோன்ற‌வில்லை. ஆனால் இதன் உண்மையை யோசித்துப் பாருங்க‌ள் உட‌ல‌ல‌வில் ஆரோக்கிய‌மாக‌ இருப்ப‌விர்க‌ளிட‌மே ஆயிர‌ம் நொண்டிச் சாட்டுக்க‌ள் சொல்லி நிராக‌ரிக்கும் நாங்களும் இப்ப‌டிப் ப‌ட்ட‌ ம‌ன‌நில‌மை உள்ள‌ அப் பொண்ணைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு முன்னால் ம‌ன‌த‌ள‌வில் நாம் எப்ப‌டிப் ப‌ட்ட‌ ஊன‌ வாதிக‌ளாக‌ இருந்திருக்க‌ வேண்டும்?

ஊனம்எவ்வாறு ஏற்படுகின்றது? நாம் கடவுளை நம்பினேமானால் எங்களைப் படைத்த அதே இறைவன் தான் சற்றுக் கூட இரக்கமில்லாமல் அவர்களையும் படைத்திருக்க வேண்டும். இதற்காக அவர்களை தண்டிப்பது எந்த வகையில் நியாய‌மாகும்? விஞ்ஞான உலகினை எடுத்துக் கொண்டோமேயானால் பரம்பரை அலகுக் காரனிகள் அல்லது ஏதாவது குறைபாட்டுக் காரணங்கள் இவ்வாறான ஊனங்கள்ஏற்படுவதற்க்கு வழிவகுக்கின்றது. அதற்காக அவர்களை புண்படுத்துவது எந்த வகையில் த‌ர்ம‌மாகும்? சரி இது எல்லாவற்றையும் தான் விட்டு விடுங்களேன் அநேகமாக விபத்துக்கள் சண்டைகள் மூலமும் இவ் ஊனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்காக எல்லாம் நாம் இவர்களை தள்ளி வைத்தோமேயானால் நாளைக்கு அதே விபத்து எங்களுக்கும் ஏற்பட்டு நாங்களும் ஊனமாகிப் போனால் எங்களையும் யாராவது வெறுத்தொதுக்கிப் போனால் அப்பொழுது அதை தாங்குவதற்கு தான் எங்களிடம் தைரியம் உள்ளதா? அப்படிப்பட்ட நாங்கள் ஏன் இவ்வாறானவர்களை வெறுத்தொதுக்க வேண்டும்? சிந்திப்போமா நண்பர்களே?

ஒருவரை புண்படுத்துவதோ மன வேதனைக்கு உள்ளாக்குவதோ எவ்வளவு பெரிய மாகா மாகா மட்டமான செயல் என்பது எங்களுக்குத் தெரியாததா என்ன? ஒருவரின் வேதணையை அழுகையை கண்டு நாங்கள் ரசித்தோமேயானால் , "இலங்கை இராணுவம் தான் எதிரிகளை மிலேச்சத் தணமான முறையில் கொன்று குவித்து மகிழ்ந்து வருவது அநாகரிகத்தின் உச்சக் கட்டம் என்றால்? இவ்வாறான மனிதர்களை கேலி கிண்டல் பேசி மனவேதனைப் படுத்தும் நாங்கள் அநாகரிகத்தின் ஆரம்பக் கட்டத்தில் அல்லவா உள்ளோம்?

என‌வே ந‌ண்ப‌ர்க‌ளே ஊனம் என்ப‌து ஒருவ‌ரின் உட‌லில் அல்ல‌ ம‌ன‌தில் தான் உள்ள‌து என்று எல்லொரும் சொன்ன‌ ந‌ல் மொழியை தான் நானும் இங்கு முன் வைக்கிறேன். அவ‌ர்க‌ளும் எம்மை போன்ற‌வ‌ர்க‌ளே. நம்மைப் போன்ற‌ உண‌ர்ச்சிக‌ள், சிந்த‌னைக‌ள் தான் அவ‌ர்க‌ளுக்கும் ப‌டைக்கப் படைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களை பரிதாபக் கண்களோடு பார்ப்பதற்குப் பதில் அவர்களை தட்டி உற்சாகப் படுத்துங்கள்.நிட்சயாமாக அவர்கள் அதை தான் அதை மட்டும் தான் எங்களிடம் இருந்து எதிர் பார்ப்பார்கள். சரி, நாங்கள் அவ‌ர்க‌ளை ந‌ண்ப‌ர்களாக தான் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவ‌ர்களை ஏதோ மூன்றாம் ம‌னித‌ரைப் போன்று பார்ப்ப‌தையாவ‌து விட்டு விடுவோம்.ஏனெனில்; நாங்கள் அவ‌ர்க‌ளிட‌ம் பார்க்கும் அல்லது தேடும் ஊனம் அவர்களிடம் அல்ல எங்கள் மன‌தில் தான் ஒளிந்து கொண்டிருக்கிறது!

வெள்ளி, செப்டம்பர் 04, 2009

என் மனதில் பட்டவை - 01



வீதியில் சுடப்பட்டு கிடக்கின்றான் ஈனத்தமிழன்
முகாம்களில் கற்பழிக்கப்படுகின்றனர்

இளம் பெண்கள்; உண்மைகள் மறைக்கப்பட்டு
வெறும் பத்திரிகைகளில் மட்டும் சிரித்தபடி
மனிதநேயம்!




***


வக்கேஷன்க்கு வந்த குழந்தைக்கு
கைகளில் நுளம்பு கடித்ததற்காக
மனைவியை திட்டுகிறான் கணவன்
கைகளை இழந்த நிலையில்
அகதி முகாம்களில் எம் குழந்தைகள்!

***



3:1 ஆகி விட்ட விகிதாசார பரம்பல்
கோடிப் பணமும் மாடி வீடும் கேட்டபடி
கலியாணச் சந்தையில் ஆண்கள்!



***

குறிப்புப் புத்தகங்களை தூக்கியபடி
அலைந்து கொண்டிருந்தாள் தாய்
பாட‌ப் புத்த‌க‌ங்க‌ளை தூக்கி எறிந்த‌
த‌ன் ம‌க‌னிற்காக‌!


***


என் தாய் நாட்டிற்கு நிக‌ர்
எதுவும் உண்டே இவ் வுலகில்?
ஒவ்வொரு புல‌ம் பெய‌ர் வாசியின்
மனங்களிலும் சிக்கித் தவிக்கின்றது ஏக்கம்!

***

ஜனநாயக நாட்டில்
பள்ளிகளில் கேட்கப் படுகின்றன
ஜாதிச் சான்றிதழ்!




பி.கு: குறிப்புப் புத்தகம் = ஜாதகப் புத்தகம்