திங்கள், மே 05, 2008

மீண்டும் வந்துவிடாதே!


உற்றார் இழந்து உறவு இழந்து
இருக்கும் சுற்றமும் இழந்து
கண்ணீர் மட்டும்
எஞ்சிவிட்ட நிலையில்
கதறி நிற்கின்றார்கள்
எம் மக்கள்
இன யுத்தம் ஓய்ந்து
இரத்தம் இல்லா சாந்தி வரும் நிலையில்
மீண்டும் ஒரு கடல் யுத்தம்
என்ன சொல்லி தேற்றுவது
வார்த்தை வருமுன்னே
வந்து நிற்கிறதே அழுகை
ஒன்றா இரண்டா
ஓராயிரம் உடல்கள்
என்னவாயிற்று
ஐயோ இந்த பூமிக்கு....?
கொள்ளி வைக்க வேண்டிய கைகள்
கொல்லப்பட்டனவோ,
துள்ளி குதித்து விளையாட வேண்டிய கால்கள்
துண்டாடப்பட்டனவோ,
பூவாக இருக்க வேண்டிய இதயங்கள்
புதைக்கப்பட்டனவோ,
இன்னும் எத்தனை எத்தனை
உயிர்கள்!
அத்தனையும் ஒரு நொடிப் பொழுதில்
சித்தம் என அழித்து விட்டாயே
எதற்காய்...........?
அஸ்தி கரைப்பதும்
ஆனந்தக் கூத்தாடுவதும்
கக்ஷ்டம் போக்க கடல்
மீன்கள் பிடிப்பதுவும்
எம் வசந்த காலத்து வரலாறுகளாய்
இன்னும் இதமாக இருக்க
அலை கொண்டு எம்மை
அலைக்கழித்தது ஏனம்மா....?
அன்று நீ இவர்களுக்கு
செல்லப்பிள்ளையாய் இருந்து விட்டு
இன்று மட்டும் எதற்காய்
கொல்லும் பிள்ளையாய் மாறிவிட்டாய்?
சமுத்திரம் என்றழைத்த
மக்கள் மனதில் - இன்று நீ
சாகும் அஸ்திரம் போலல்லவா
ஆகிவிட்டாய்....?
"சுனாமி" என்று உன்னை அழைக்கிறார்களே,
நாங்கள் சுவாமியாக நினைத்து
கேட்கிறோம் - வந்து விடாதே
மீண்டும் எம் நாட்டுக்கு.