ஞாயிறு, மார்ச் 08, 2009

சின்னப் பூவே மெல்லப் பேசு...(பாக‌ம் 01)


நான்கு சுவர்களுக்கிடையில் அமர்ந்திருந்து கண்களில் நீர் வழிய முகட்டை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் தாரணி. அவளுடைய நினைப்பெல்லாம் குமரன், குமரன்,குமரன் என்ற ஒருவனை பற்றியதாகவே அமைந்திருந்தது.

குமரன் கிளிநொச்சியை பிறப்பிடமாக கொண்டவன், நல்லதொரு தாய் தகப்பனிற்கு இவன் தான் தலைப்பிள்ளை. இவனுக்கு பின்னர் இரு தம்பியும் கடைக்குட்டி பிரியாவுமே இவனது குடும்ப சொத்தாக இருந்தது. தகப்பனார் தணிகாசலம் தனக்கு சொந்தமான வயலில் விவசாயம் செய்து அதன் மூலம் ஈட்டிய வருவாயில் தனது பிள்ளைகளை குறையற படிப்பித்து வந்தார். என்ன தான் வறுமை அவர்களை அடிக்கடி சிறைப் பிடித்தாலும் அவர்கள் நால்வரும் தமது பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் படிப்பில் படு சுட்டிகளாகவே விளங்கினர். அதிலும் குமரன் அதி புத்திசாலி என்றே கூறலாம். எதனையும் சட்டென புரிந்து கொள்ளும் கற்பூர புத்தி அவனுக்கு வாய்த்திருந்தது. இப்பொழுது அவன் உயர்தர வகுப்பில் முதலமாண்டு மாணவன். வகுப்பில் தன் தந்தைக்கு உதவும் நேரம் போக மிகுதி நேரமெல்லாம் அவனது கவனம் படிப்பொண்றாக மட்டுமே இருந்தது.

ஆனால் இப்பொழுதெல்லாம் சில நாட்களகவே அவனது இதய வானில் பல பட்டாம் பூச்சிகளை பறக்க விட்டுக் கொண்டிருந்தவள் தார‌ணி.

தாரணி... அமைதியே உருவாண அழகிய அவளது முகம், அடர்ந்த நீண்ட கூந்தல், மெல்லிய தேகம், குழந்தைகளின் சிரிப்பில் தன்னை தொலைக்கும் அவளது குணம், அப்பப்பா...குமரனின் மனத்திரையில் தான் அவளது நிஜப்படம் எத்தனை எத்தனை விதமாய் வார்த்தைகளற்று...


தாரணி, குமரன் படிக்கும் அதே பாடசாலையில் தான் கா.பொ.த (சாதாரண தரம்) கற்கையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவள், அவளும் கிளிநொச்சியையே பிறப்பிடமாக கொண்டிருந்தாள். அவளது தகப்பனார் ஆறுமுகவாணன் அவ்வூரிலே சிறிய பலசரக்கு கடை ஒன்று வைத்து வியாபாரம் நடத்தி வந்தார். தாரணியையும் அவனது அண்ணன் சிவசங்கரனையும் கொண்டதாக பொற்றோருடன் சேர்ந்து அச் சிறியதொரு குடும்பமே அவளது உலகமாக இருந்தது. தாரணி ஆரம்பத்தில் வேறு ஒரு பாடசாலையில் தரம் 10 வரை பயின்று விட்டு O/L பரீட்சைக்காக இப் புதிய பாடசாலைக்கு அறிமுகமாகியிருந்தாள். தாரணியின் அண்ணன் சிவசங்கரன் வேலை காரணமாக யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகி சென்றிருந்தான். தாரணியின் தாயார் ஒரு ஆஸ்துமா நோயாளி, அவரை கவனிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் தாரணியினுடையதாகவே இருந்தது. தனது தகப்பனாரின் கடையில் வேலை தாயின் சேவை இதற்கிடையில் படிப்பு என்று தாரணியின் வாழ்க்கை வட்டம் சுழன்று கொண்டிருந்தது.


தனது தாயார் ஆஸ்துமா நோயால் வேதனைப்படுவதை கண்டு மனம் பொறுக்காதவள் தான் படித்து ஒரு வைத்தியராகி த‌ன‌து தாயின் நோயை குண‌மாக்குவேன் என்று அடிக்க‌டி த‌ன் த‌ந்தையிட‌ம் கூறி வ‌ந்தாள். அதிகாலை 5 ம‌ணிக்கெல்லாம் எழுந்து விடும் ப‌ழ‌க்க‌ம் உள்ள‌ தார‌ணி த‌ன‌து பாட‌சாலைக்கு சைக்கிளிலே சென்று வ‌ந்து கொண்டிருந்தாள். அவ‌ள‌து வீட்டிலிருந்து அவ‌ள் புதிதாய் க‌ல்வி ப‌யிலும் பாட‌சாலை சிறிது தொலைவிலேயே அமைந்திருந்த‌தும் அதற்கு ஒரு கார‌ண‌மாக‌ இருந்தது.

அன்றும் அப்ப‌டித்தான் மாத‌த்தின் முத‌ல் புத‌ன்கிழ‌மை குளித்து நீராடி விட்டு த‌ன் தாயிற்கு செய்ய‌ வேண்டிய‌ க‌ட‌மைக‌ள் அத்த‌னையையும் முடித்து விட்டு அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ பாட‌சாலைக்கு புற‌ப்ப‌ட்டுக் கொண்டிருந்தாள். பாடசாலை தொட‌ங்கும் நேர‌மோ 7.30 இத‌ற்கு சிறிது தாம‌த‌மானாலும் அங்கு த‌ர‌ப்ப‌டும் த‌ண்ட‌னை அவ‌ள‌து ம‌ன‌தில் ப‌ட‌ம் விரித்தாடிய‌து. அந்த‌ ப‌த‌ற்ற‌த்துட‌ன் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ சைக்கிளை மிதித்த‌வ‌ள் எதிரில் வ‌ந்த‌ வ‌ய‌தான‌ ஒருவ‌ருட‌ன் மோதிவிட்டாள். அவர் வேறு யாருமே இல்லை அவ‌ர் தான் தார‌ணியின் வ‌ருங்கால‌ மாம‌னார் என்ப‌தை அவ‌ள் அன்று ச‌ற்றும் அறிந்திருக்க‌ வாய்ப்பில்லை தான்.

அவ‌ருட‌ன் மோதுண்ட‌ அதிர்ச்சியில் த‌ட்டு த‌டுமாறி எழுந்த‌வ‌ள் தான் ஒரு வ‌ய‌தான‌வ‌ருட‌ன் மோதிவிட்டோம் என்ப‌தை அறிந்து அழ‌ ஆர‌ப்பிக்க‌லானாள்.ஆனால் அவ‌ள‌து அதிஷ்ட‌ம் அப் பெரிய‌வ‌ருக்கு எதுவித‌மான‌ சிறு காய‌ங்க‌ள் கூட‌ ஏற்ப‌ட்டிருக்க‌வில்லை. அத‌னை அப் பெரிய‌வ‌ர் அவ‌ளுக்கு ப‌ல‌ முறை எடுத்துக் கூறியும் அவ‌ள‌து அழுகை நின்றபாடாக‌வில்லை. அவ‌ள் அப் பெரிய‌வ‌ரிட‌ம் த‌ன் செய‌லுக்காக‌ ம‌ன்னிப்பு கேட்டு விசும்பிக் கொண்டிருந்தாள். அவ‌ளை ச‌மாதான‌ப் ப‌டுத்தி தோற்ற‌வ‌ரின் முகத்தில் அவளது பள்ளிச் சீருடைகள் மின்னலடித்தன. ஆம் அவரது மகன் குமரன் படிக்கும் அதே பாடசாலைக்குரிய சீருடைகள்.அவர் தனது முகத்தில் சிரிப்பை வரவழைத்து கொண்டவர், தார‌ணியை நோக்கி "அழாத‌ குழ‌ந்த‌, உந்த‌ ப‌ள்ளிக்கூட‌த்தில‌ தான் என்ட‌ ம‌க‌னும் ப‌டிக்கிறான் பேர் கும‌ர‌ன், அவ‌ன்ட‌ அப்ப‌ன் தான் நான். என‌க்கு ஒன்டுமில்லய‌ம்மா உன‌க்கு school தொட‌ங்க‌ போகுது, நீ போம்மா நாளைக்கு நான் என்ட‌ ம‌க‌ன‌ட்ட‌ சொல்லி அனுப்புற‌ன் என்று அவ‌ளை தேற்றி விட்டு புற‌ப்ப‌ட‌லானார் கும‌ர‌னின் த‌ந்தை.


ஆனால் அவ் வார்த்தைக‌ளை கேட்ட‌ தார‌ணியோ விக்கித்து நின்றாள். அவ‌ள‌து காதுக‌ளில் வ‌ந்து நின்ற‌ கும‌ர‌ன் என்ற‌ பெய‌ர் மேலும் அவ‌ளை ப‌ய‌முறுத்துவ‌தாக‌வே அம‌ந்திருந்த‌து. ஏனெனில், கும‌ர‌ன் அவ‌ள‌து பாட‌சாலையில் ந‌ன்கு அறிய‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ன். கார‌ண‌ம் அவ‌ன் தான் அப் பாட‌சாலையின் மாண‌வ‌த் த‌லைவ‌ன். ப‌டிப்பிலும் ச‌ரி விளையாட்டிலும் ச‌ரி அவ‌னை மிஞ்ச‌ ஆளே இல்லை என்று அடிக்க‌டி அவ‌ள‌து வ‌குப்புத்தோழிக‌ளின் வாயால் கும‌ர‌ன் புராண‌ம் பாட‌க் கேட்டுள்ளாள். ஆக‌வே வ‌ர‌ப்போகும் நாளை எப்ப‌டி இருக்குமோ என்ற க‌ல‌க்க‌ம் அவ‌ளை வெகுவாக‌ வாட்டிய‌து. தாம‌த‌மான‌ இன்றைய‌ நாளால் பாட‌ச்சாலைக்கு செல்ல‌முடியாம‌ல் போன‌தால் வீடு திரும்பியதால் த‌ன் த‌ந்தையிட‌ம் ந‌ன்றாக‌ வாங்கிக் க‌ட்டிக் கொண்டு த‌ன‌க்கு விருப்ப‌மான‌ த‌மிழ் பாட‌த்தை எடுத்து ப‌டிக்க‌லானாள்.


ஆனால் எங்கே ப‌டிப்பு வ‌ந்த‌து, கும‌ர‌ன் தான் வ‌ந்தான். ஏன் என் அப்பாவை விழுத்தாட்டினாய் என்று அத‌ட்ட‌வும் செய்தான். அதே ப‌ய‌த்துட‌னே உற‌ங்கியும் போனாள் தார‌ணி.


‌றுநாள் பொழுதும் புல‌ர்ந்த‌து, ஆனால் நேற்றைய‌ க‌வ‌லை ம‌ற‌ந்திருக்க‌வில்லை. நேற்ற‌ய‌ நாளின் தாம‌த‌த்தினால் ஏற்ப‌ட்ட‌ விப‌த்து ஞாபகத்திற்கு வ‌ர‌வும் இன்றைய‌ தின‌ம் த‌ன‌து வேலைக‌ளை வெகு சீக்கிர‌மாக‌வே முடித்துக் கொண்டு புற‌ப்ப‌ட‌லானாள் தாரணி.

ஆனால் அன்றைய தினம் பாட‌சாலையில் கும‌ர‌னை எங்கு தேடியும் க‌ண்டு பிடிக்க‌ முடிய‌வில்லை அவ‌ளால். நேற்று நினைவ‌லைக‌ளில் அப்ப‌டியும் இப்ப‌டியுமாக‌ வ‌ந்து ப‌ய‌முறுத்திய‌வ‌னை இன்று காண‌வில்லை. அவ‌னைக் காண‌வில்லை என்ற‌தும் தார‌ணியின் ப‌ய‌ம் மேலும் அதிக‌ரித்த‌து. பாட‌சாலை தொட‌ங்கி இடைவேளை ம‌ணியும் அடித்த‌து, த‌ன‌க்குரிய‌ உண‌வை எடுத்துக் கொண்டு த‌ன‌து தோழிக‌ளுட‌ன் சேர்ந்து நேற்றைய‌ ச‌ம்ப‌வ‌த்தை அர‌ட்டை அடித்த‌வாறே உண்ண த‌யாரானாள். அப்போது ஒரு குர‌ல், க‌ம்பீர‌மான‌ ஒரு குர‌ல் Excuse Me! இங்க‌ தார‌ணி...?
அக் குரல் கேட்டதுதான் தாமதம் அக் குரல் வந்த திசையை நேக்கு மின்னலென திரும்பினாள் தாரணி. ஆனால் அங்கே முகத்தில் புன் சிரிப்புக்களுடன் இரு கைகளையும் குறுக்கே கட்டியபடி அவளை நேக்கி நின்றான் குமரன்.
தொடரும்...