தாரணியின் பயத்தை கண்டு அவனுக்கு சிரிப்பும் வந்தது. அவன் அப்பாவியான அப்பெண்னை நோக்கி "பயப்படாதீங்க தாரணி, எங்கட அப்பாக்கு ஒன்டும் இல்ல. நீங்க பயப்பட்டு கொண்டிருப்பீங்க எண்டு தான் அப்பா உங்களட்ட சொல்லீற்று வரச் சொன்னார். "அப்ப சரி நான் வாறன் என்ன"என்று கூறிவிட்டு விடை பெற்றான்.
ஆனால் அன்றைய தினமோ அவன் கண்கள் தான் விடை பெற்றது, மனம் என்னமோ தாரணியிடம் தான் சிக்கிக் கொண்டது. அன்று ஆரம்பமான அவர்களின் முதல் சந்திப்பு அவர்களை நண்பர்களாக்கியது. அன்றிலிருந்து தாரணிக்கு பல வகைகளிலும் உதவி புரியலானான் குமரன். தாரணி தனது பாடம் சம்மந்தமான அனைத்து விளக்கங்களையும் குமரனிடம் கேட்டு புரிந்து கொண்டாள். அவர்களிடைய அத்தகைய நட்பு காலப் போக்கில் காதலாகவும் உருவெடுத்தது. ஆனால் அவர்கள் அச் சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவர்களாக இருந்த படியால் தங்கள் காதலை ஒருவருக்கொருவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. படிப்பு முடியட்டும் என்று குமரனும், குமரனே முதலில் சொல்லட்டும் என்று தாரணியும் இருந்து விட்டனர். ஆனால் அவ் இருவரினது நட்பும் அவர்களை இணைபிரியா நண்பர்கள் என கூற வைத்தது. இவ்வாறு இருக்கையில் தாரணி க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறு பேறுகளை பெற்று தான் விரும்பிய படியே விஞ்ஞான பிரிவுக்குள் காலடி எடுத்து வைத்தாள்.
நாட்கள் நகரலாயின குமரன் தனது வணிகவியல் கற்கை நெறியில் கிளிநொச்சி மாவாட்டத்திலேயே அதி கூடிய புள்ளிகளை பெற்று முதல் மாணவனாக தெரிவு செய்யப்பட்டான். ஊரே அவனை கொண்டாடியது. தாரணியின் மகிழ்ச்சிக்கு சொல்லவும் வேண்டுமா...? இதேவேளை குமரன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டிய நாளும் வந்தது. குமரனுக்கு யாழ்ப்பாண பல்லகலைக் கழகம் கிடைக்கப் பெற்றிருந்தது. இருவருக்கும் பிரிய வேண்டிய சூழ்நிலை, பல்கலைக்கழகம் செல்வதற்கு முதல் நாள் குமரன் தன் காதலை வெளிப்படுத்தினான். கண்களில் கண்ணீர் பெருகஆனந்தமாக தனக்கும் அவனை மிகவும் பிடித்திருப்பதாக கூறினாள். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த அவன் தாரணியிடம் எதற்கும் பயப்பட வேண்டாம் தான் நிட்சயமாக அவளின் கரம் பற்றுவேன் என உறுதிமொழி அளித்து விட்டு பல்கலைக் கழகம் புறப்படலானான்.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகம் முற்றும் வித்தியாசமான சூழ்நிலை படிப்புடன் பகடிகள் பல இருந்த போதிலும் அவன் தாரணியின் நினைவுகளில் இருந்து விடுபடவேயில்லை. இவனது காதல் மடல் அவளது அன்புக் கரம் நோக்கி தவழ்ந்து கொண்டுதானிருந்தது.
இதேவேளை தாரணியும் க.பொ.த(உ/த) பரீட்சை பெறுபேறுகளை எழுதி முடித்திருந்தாள். ஆனால் அவள் விரும்பிய வைத்திய தொழிலுக்குரிய பெறுபேறுகள் கிடைக்காததால் பெருத்ததொரு ஏமாற்றமே அவளுக்கு பரிசாக கிடைத்தது. ஆனாலும் அவள் மனம் சோர்ந்து போய்விடவில்லை. தனது பெற்றோரினது சம்மதத்துடன் தாதியர் பயிற்ச்சி நெறிக்கு விண்ணப்ப படிவம் அனுப்பினாள். அவளது அதிஷ்டம் யாழ்ப்பாணம் தாதியர் பயிற்ச்சி கல்லூரிக்கு அவள் தெரிவு செய்யப்பட்டாள். தனயன் யாழ்ப்பாணத்தில் இருப்பதினால் பெற்றோரினது சம்மதமும் கிடைத்து விட எல்லாவற்றிற்கு மேலாக குமரனும் யாழ் பல்கலைகழகத்திலேயே பயின்று வருவதினாலும் தாரணி யாழ் செல்லும் நாளை மிக மிக ஆவலுடன் எதிர்பார்க்க தொடங்கினாள்.
அவள் எதிர் பார்த்த அந்த பொன்னான நன் நாளும் வந்து சேர்ந்தது. அவளும் யாழ் நகரை வந்தடைந்தாள். அவளுக்கு தனது பயிற்ச்சிக் கல்லூரியிலே இடம் கிடைத்துவிட அங்கேயே தங்கி தனது படிப்பை தொடரலானாள். பயிற்ச்சிக் கல்லூரியில் நிறைய தோழியரும் அறிமுகமாயினர். இயல்பிலேயே இரக்க சுபாவம் நிறைந்த தாரணிக்கு தாதியர் வேலையும் வெகுவாக பிடித்துவிட நாட்கள் ஆனந்தமாகவே நகரலாயின. இடைஇடையே குமரனிடமிருந்து வரும் பதில்களும் மகிழ்ச்சி தருவனவாகவே அமைந்தன.
நாட்கள் நகர்ந்தன, மாதங்கள் வருடங்களாகியது. கிளிநொச்சியில் குடும்பத்தில் ஒரு பிள்ளை கட்டாயமாக விடுதலைப் புலிகளில் சேர வேண்டிய ஒரு சூழ்நிலை. குமரனின் குடும்பமும் இதற்கு விதிவிலக்காகவில்லை. குமரனின் 2வது தம்பியும் கட்டாயத்தின் நிமித்தம் விடுதலை புலிகளின் உறுப்பினனான். குமரனின் தந்தை எவ்வளவு கெஞ்சியும் அதற்கு பலனிருக்கவில்லை. "உங்களின் அடுத்த சந்ததி நலமாக வாழவேண்டுமெனில் இந்த சந்ததியில் ஒருவரை தியாகம் செய்யுங்கள்" என்பதே அவர்களது பதிலாக இருந்தது. அப்போது குமரனுக்கு இறுதியாண்டு. தனது எதிர்காலம் பற்றியும், தனது குடும்பம் பற்றியும் ஆயிரம் ஆயிரம் ஆசைக் கணவுகள் கண்டு கொண்டிருந்தவனுக்கும் இச் செய்தி பேரிடியாகவே இருந்தது. தன் துயரங்களை மறைக்க முயன்றவன் முடியாது வாய் விட்டு கதறி அழுதான்.
ஒருவாறாக தனது பல்கலைகழக படிப்பை நிறைவு செய்தவன், கிளிநொச்சிக்கு ஓடினான். அங்கு வேறறுந்த மரம் போல் திரணியற்ற முகங்களுடன் கண்ணீர் சிந்தி வரவழைத்த அவனது பெற்றோரை காண்கையில் அவனது மனமும் ஊமையாய் அழுதது. அந்த ஒரு நொடிப் பொழுதில் முடிவெடுத்தான் குமரன். தன் தம்பியின் வாழ்விற்காக தனது தலையை அடைமானம் வைத்தான் அவன் . பெற்றோருக்கு தெரியப்படுத்தாமலே இவ் முடிவை மேற்கொள்ளலானான் . தன் தம்பியை விடுவித்தவன், பத்திரமாக அவனை யாழ் நகரிற்கும் அனுப்பி வைத்தான். உருக்குலைந்து நின்ற பெற்றோருக்கு தன் பார்வையாலே ஆறுதல் மொழி கூறினான் குமரன்.
ஆனால் அங்கே அவ் வியக்கத்திலோ அவனது திறமைக்கே முன்னிரிமை வழங்கப்பட்டது. அவர்களது அலுவலகத்தில் அவனை ஒரு உத்தியோகத்தனாக்கினார்கள். அவர்களுடைய கணக்கு வழக்கு சம்மந்தமான சகல பொறுப்புகளும் அவனிடமே ஒப்படைக்கப் பட்டது. அவர்களது அரசியல் அலுவலகத்தில் அவன் ஒரு கணக்காளன் ஆனான்.
இந் நிகழ்ச்சிகளை தாரணி கேள்வியுற்ற போது மிகுந்த வேதனை அடைந்தாள். குமரனின் கடிதங்களே அவளை தேற்றின. "நிலைமை சரி வரும், அப்போது எங்களுக்கும் எழுச்சி கிடைக்கும் நாங்களும் மதிக்கப் படுவோம்" என்ற அவனது வார்த்தைகள் அவளுக்கு மிகுந்த நம்பிக்கை ஊட்டுவதாகவே அமைந்திருந்தன. குமரனுக்காக தினம் தினம் அவள் இறைவனை வேண்டலானாள்.
இவ்வாறு இருக்கையில் தாரணியின் படிப்பும் நிறைவடைந்தது. அவள் வவுனியா வைத்தியசாலைக்கு தாதியாக தெரிவு செய்யப்பட்டாள். இதற்கிடையில் கிளிநொச்சி சென்ற தாரணி தனது காதலை பெற்றோரிடம் தெரியப்படுத்தினாள். இக் காதல் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த அவளது தந்தை குமரனின் குடும்பம் பற்றியும் நன்கு அறிந்திருந்தார். சொல்லப் போனால் அவர் அக் குடும்பத்தின் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்றே கூறலாம். ஆனால் குமரனின் தற்போதைய நிலை அவரை ஆட்டம் காண வைத்தது. ஆனால் தாரணியின் கண்ணீருக்கு முன் அவரால் மறுப்பு கூற முடியவில்லை. மனமின்றி சம்மதம் அளித்தார். தகவல் குமரனின் வீட்டிற்கும் தெரியப்படுத்தப் பட்டது. குமரனின் குடும்பத்தினர் தாரணியை தலை மேல் வைத்து கொண்டாடலாயினர். இதனால் பெரிதும் மனம் மகிழ்ந்த குமரனும் முட்களிலும் மலரும் றோஜாவைப் போல் சிரிப்புடன் தலையசைத்து தன் சிநேகம் சொல்லி வழி அனுப்பி வைத்தான் தாரணியை வவுனியா வைத்தியசாலைக்கு.
வவுனியா சென்றடைந்த தாரணியும் தன்னுடன் பயின்ற நண்பி ஒருவரின் வீட்டில் இடம் கிடைத்து விடவே அங்கிருந்த படியே தனது பணிக்கு சென்று வரலானாள். நண்பியின் குடும்பமோ தாரணியின் மேல் மிகுந்த அக்கறை பாராட்டியது. நாட்கள் நகர்ந்து கொண்டேதானிருந்தன. அடிக்கடி வரும் குமரனின் குலம் விசாரிப்புக்கள் அவளை வாழ வைத்துக் கொண்டிருந்தது.
தொடரும்...