இங்கோ தாரணியோ குமரனிடம் இருந்தோ தனது பெற்றோரிடமிருந்தோ எது வித தகவலும் இன்றி தனியே தவிக்கலானாள். அவளது நாட்கள் கண்ணீரில் கரையலாயின. எப்போதாவது பெற்றோரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வரும், அவர்கள் எடுத்து பேசுவார்கள் ஆனால் குமரன் பற்றிய தகவல்கள் அவர்களுக்குக் கூட தெரிந்திருக்கவில்லை. போரும் உக்கிரமடைய ஆரம்பிக்க தாரணியின் மன வேதனைகளும் உக்கிரமடைய ஆரம்பித்தன.
மாதங்கள் சில கடந்த நிலையில் கிளிநொச்சி மாநகரை கைப்பற்றிப் பிடித்த செய்தியை பட்டாசு முழக்கங்களுடன் அரசு அறிவித்தது. எங்கும் எதிலும் அரசின் வெற்றிச் செய்தியே எக்காள தொனியுடன் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இடம் பெயர்ந்த மக்களும் சிறிது சிறிதாக தங்கள் ஊர்களுக்கு திரும்பத் தொடங்கினர். குமரனின் குடும்பமும் தமது சொந்த ஊரை வந்தடைந்தனர். இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருந்த சமயம் அது. ஆனால் குமரனின் தந்தை அஞ்சவில்லை. அவருக்கு தன் மகனின் ஆயுளின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் விதி? குமரனின் உயிரற்ற உடலே அவருக்கு பரிசாக கிடைத்தது. குண்டுகள் துளைக்கப்பட்டு சிதைவடைந்த நிலையில் வெள்ளை துணிகளால் சுற்றப்பட்டு அவர் முன் பார்வைக்காக வைக்கப்பட்டது அவனது உயிரற்ற வெறும் உடலே. தன் மகன் மரணமான காட்சியை காண சகிக்காத அவர் வயிற்றிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தழுதார்.
குமரன்...,,, அவரது முதற் பிள்ளை. சிறு வயதுகளில் அவரது கரம் பிடித்து இவ் வயல் வெளியெங்கும் ஓடி மகிழ்ந்தவன். உயர்தர பரீட்சையில் அதி சிறந்த பெறுபேறுகளை பெற்று இவ் ஊரார் வாயாலே புகழுரை கேட்கப் பெற்றவன். தன் தம்பியின் நல் வாழ்வுக்காக தன் வாழ்வை பணயம் வைத்தவன். இன்று அவர்கள் முன்னிலையில் உயிரற்ற வெறும் உடலாய் கிடத்தப்பட்டிருந்தான். அழுதார்கள், புலம்பினார்கள். ஆனால் மாண்டவன் மீள்வானோ...? மீண்டெமைக் காண்பானோ...?
நாட்கள் கடந்திருந்த படியால் குண்டு துளைக்கப்பட்ட அவனது உடல் உடனடியாக புதைக்கவோ இல்லை எரிக்கவோ வேண்டிய கட்டாயம். அதிலும் அவன் அவ் இயக்கத்தின் உறுப்பினனும் ஆதலால் அவர்களிடம் அவனது உடல் தர அனுமதி மறுக்கப் பட்டது. சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அவனது உடல் தகனமும் செய்யப்பட்டது. அவனுடன் சேர்த்து நூற்றுக்கணக்கான உடல்களை தீயின் கோரப்பற்கள் விழுங்கிக் கொண்டன. இறுதியாக குமரனின் சாம்பல் அஸ்தியாக அவனது தகப்பனாரிடம் கையளிக்கப்பட்டது.
அஸ்தி கரைப்பதற்கு முன்னர் தன் வருங்கால மருமகள் என்று கனவு கண்டு வைத்திருந்தவளிடம் கனவு நொறுங்கி விட்ட செய்தியை கூற தொலைபேசி அழைப்பெடுத்தார் குமரனின் தந்தை. ஏற்கனவே பாதி உயிர் மாள மீதி உயிர் நோக வாழ்ந்து கொண்டிருந்த தாரணி அவனது மரணச் செய்தியினை கேட்ட கணம் தன் கையிலிருந்த தொலைபேசி தவற பூமி பிழந்து தன்னை உள்ளிழுப்பது போல் தோன்ற மயங்கிச் சரிந்தாள் நிலத்தில்.
அவ்வேளை அவளுடன் கூடவே இருந்த நண்பி அவளது நிலமையை புரிந்து கொண்டு அவளை தாங்கினாள், தேற்றினாள். அவளது குடும்பமே தாரணிக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறிக்கொண்டிருந்தனர். இருந்தும் தாரணி இன்றைக்கொரு நடைப்பிணம் போலவே வாழ்கிறாள். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக தொடர்ந்த அவர்களது காதல் பறித்துக் கொள்ளப்பட்ட செய்தியை அவளால் ஜீரணிக்க கூட முடியவில்லை .