"தத்தி தத்தி நடை பயின்று
கொஞ்சும் மொழி பேசி
வட்டமிட்டு வலம் வந்து
தன் அம்மாவின் கன்னத்தில்
'இச்' ஒன்று பதித்திடும்
எம் செல்லக் கண்மணிகளுக்கு..."
ஆமாங்க நான் இங்கு பேச வந்திருப்பது மழலைகளின் மொழி பற்றித் தானுங்க, அந்த ஆண்டவன் படைப்பில் உலகில் ஆயிரம் ஆயிரம் மனிதர்கள் அம் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு சிறப்பு. காதலர்களுக்கு காதல் சிறப்பு, மாணவர்களுக்கு கல்வி சிறப்பு, பெற்றொர்களுக்கு பிள்ளைகள் சிறப்பு, தொழிலாலர்களுக்கு உழைப்பு சிறப்பு. இவ்வாறுள்ள ஆயிரமாயிரம் சிற்ப்புக்களுள் நான் மிகவும் இனிமையானதாகவும் ரசிக்கத் தக்கதாகவும் கருதுவது எம் மழலை செல்வங்களின் கொஞ்சும் மொழியைத் தான்.
பொதுவாக சிறுவயதில் குழந்தைகள் எல்லோருமே அழகாகத் தான் இருப்பார்கள். அவர்களது குறும்புகள் சேஷ்டைகளிற்கு அளவிருக்காது. அவர்களது மழலை மொழி எங்களுக்கு புரியவே புரியாது, ஆனால் அம் மொழியை கேட்கும் போது எங்களுக்கு திகட்டவே திகட்டாது. அத்தனை ஆசையாக இருக்கும் அவர்களது மழலை மொழி. இதை பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?
பொதுவாக ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டால் அது ஆகாரம் சாப்பிடுவதற்கு "நண்ணா" வேனும் என்கிறது, இன்னொரு குழந்தை அதே ஆகாரத்தை "அவ்வா" என்கிறது. எப்படித் தான் கண்டுபிடிக்கிறார்களோ இப்படியொரு அற்புதமான மொழிப் படைப்பை! இதனால் தான் எந்த வள்ளுவனும் குழந்தை அகராதி என்றொண்டை உருவாக்காமலே போயிருப்பானோ?
கண்களால் சிரிப்பதும், வாண்டுத்தனமும், தத்தக்க பித்தக்க போன்ற அவர்களது மொழிப்படைப்பும் அப்பப்பா... அவர்களுக்கே உரிய வர்ணனைகள் அன்றோ?
நான் சில வேளைகளில் நினைப்பதுண்டு இந்த வாண்டுகளைப் பார்த்து எங்களது வாண்டுகள் அதாவது இலங்கை, இந்தியாக் கண்டங்களை சேர்ந்த வாண்டுகள் ண , ந என்றும் சீனா யப்பான் தேசங்களை சேர்ந்த வாண்டுகள் ங, ஞ என்றும் மேற்கு ஜரோப்பிய நாடுகளை சேர்ந்த வாண்டுகள் ஷா, ஷீ என்றும் கதைப்பார்களோ என்று , ஏனெனில் அத்தனை ரசிக்கத் தக்கவை இவர்களது மழலை மொழி. புதிது புதிதாக மொழிகளை உருவாக்க இவர்களால் மட்டும் தான் முடியுமோ என்னவோ?
எனது அக்காவிற்கு ஒரு மகள் இருக்கிறார். ஆள் படு சுட்டி. தேவதை வம்சம் என்றே அவளைப் பார்த்தால் கூறத் தோன்றும். அகன்ற பெரிய கண்களும் வட்ட முகமுமாய் எப்பொழுதும் தூக்கிக் கொஞ்சத் தோன்றும் அழகு உருவம் கொண்ட வாண்டு அவள். எங்கள் எல்லோரினதும் குட்டிப் பிசாசும் அவள் தான். அண்மையில் தான் தனது 2வது வருட பிறந்த தினத்தை(29.03.2009) கொண்டாடி மகிழ்ந்திருந்தாள். ஏன் இந்த குட்டியைப் பற்றி நான் குறிப்பிடுகிறேன் என்றால் இவள் தான் எனது அக்காவின் ஒரே ஒரு செல்ல வாரிசு. இவளை இவளது பெற்றோர் ஒரு பொக்கிஷம் போலவே பாதுகாக்கின்றனர். படு செல்லம் அவளுக்கு. அப்போ இக் குட்டியின் சேஷ்டைகள் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
நானும் அக்காவும் அடிக்கடி உரையாடும் சந்தர்பங்களில் தானும் ஆஜராகி விடுவா இந்த குட்டி வாண்டு. இந்த குட்டி வான்டுக்கு தன்னைத் தான் தன்னை மட்டும் தான் கவனிக்க வேண்டும். அதற்காக இந்த குட்டி வாண்டு செய்யும் அட்டகாசங்கள் ரசிக்கத் தக்கவை. இவளைப் பார்ப்பதிலே எங்களது பொழுதுகள் யாவும் கழிந்துவிடும். அவ்வாறான குறும்புக்காரி. இவரது மொழி ரசிக்கத் தக்கது. விளையாட்டு கரமானது. ஆனால் எங்களுக்கு அது புரியவே புரியாது. ஆனாலும் நாங்கள் தினம் தினம் அதை கேட்டு ரசிப்போம். எந்த தித்திப்பான இனிப்புப் பண்டமும் தோற்றுப் போய்விடும் இம் மழலைகளின் கொஞ்சும் மொழிக்கு முன்னால். அத்தனை அழகு. ஆனால் அம்மொழிகள் எமக்கு புரிவதில்லை.
பொதுவாக நாங்கள் எமக்குப் புரியாத எதையுமே பெரிதாக ரசிப்பதில்லை தானே? ஆனால் மழலை மொழி எமக்கு புரியாத புதிர் என்ற போதிலும் நாம் ரசிக்கின்றோம், சிரிக்கின்றோம், மன நிறைவும் அடைகின்றோம். அது ஏன்? அட உங்களுக்காவது தெரியுமா அவர்கள் என்ன தான் பேசிகிறார்கள் என்று...?
***Wish u a Happy Birthday
Sabia Kutty!***