புதன், பிப்ரவரி 18, 2009

ச்ச்சீசீதனம்...


பொன் வேண்டும்,
பொருள் வேண்டும் என்பர்,
பெண் பாவை தாம் எமை வரன் கேட்பார்...

சீர் வேண்டும்,
சொத்து வேண்டும் என்பர்,
சிறப்புடனே நாம் வாழ்ந்திடவே என்பர்...

கார் வேண்டும்,
கனக்க வேண்டும் என்பர்,
கண்மணியே உனை கருத்தோடு காத்திடுவேன்
என்பர்...

ஆனாலும் எம்ம‌வ‌ரே...

பொன் வேண்டாம்
பொருள் வேண்டாம்

சீர் வேண்டாம்
சொத்தும் வேண்டாம்

கார் வேண்டாம்
கன‌க்க‌வும் வேண்டாம்

உம‌த‌ன்பு ஒன்றே போதுமே எமக்கு,
உயிரென‌ நாம் உம‌க்காய் வாழ்ந்திட‌வே...

புதன், பிப்ரவரி 11, 2009

என்ன‌ நான் சொல்லுற‌து...?


ஒண்டும் விளங்குதில்ல...?
எங்கட பாழாய் போன லங்கா தேசத்தில;
என்ன நான் சொல்லுறது;
எல்லாம் எங்கட "வற்"றிட வளர்ச்சி பற்றித்
தானுங்கோ...

ஒருக்கா கூடுமென்பர்,
ஒருக்கா குறையுமென்பர்,
ஆனா ஒண்டையுமே காணம்...?
எங்கட பொருட்கள்ட விலையேற்றம் தவிர,


முதல்ல 15% ம்,,,
பிற‌கு 13% ம்,,,
இப்ப 12% ம்,,,
ஆனா என்னண்ட‌ என‌க்குப் பார்த்தா,
இப்ப‌ ஏதோ 16% மாதிரிக் கிட‌க்கு
அப்ப‌டி இருக்கு சந்தைல‌ சாமான்ட‌
விலையெல்லாம்.

கேட்டா ஏதோ Nation Building Tax ஆம்...?
ஓமோம் ஓமோம் ந‌ல்ல‌ ப‌க‌டிதான் பாருங்க‌;
இங்கால‌ ஒரு ப‌க்க‌ம் Nation People Distroyed
அங்கால‌ ஒரு ப‌க்க‌ம் Nation Build Up ந‌ட‌க்குது
போல‌,

யாருக்கு தான் விள‌ங்குமோ;
எங்க‌ட‌ பெரிய‌ ம‌னுச‌ன் ம‌ஹிந்த‌வின்
சிந்த‌னைக‌ள்...?

ஞாயிறு, பிப்ரவரி 08, 2009

கேட்கவில்லையோ எம் குரல்.....?


சர்வதேச சமூகமே...,
ஏனிந்த மொளனம்...?
ஏனிந்த பாராமுகம்...?
கேட்கவில்லையோ எம் குரல்...?
காணவில்லையோ நம் மக்களின்
படுகொலைகளை ...?

தீக்குளித்தோம்,
உண்ணா நோன்பிருந்தோம்,
மனித சங்கிலியாய் களம் கண்டோம்,
ஆனாலும் பயனில்லையோ...?
அது உம் செவி தனில் படவில்லையோ...?


தந்தி வழி மனுக்கொடுத்தோம்,
தகவல்கள் பலவும் தந்தோம்,
த‌ர‌ணியெங்கும் தமிழர்கள் நாம் த‌யை கேட்டோம்,
ஆனாலும் த‌ய‌க்க‌மேன் உம‌க்கு...?
த‌ட‌ய‌ங்க‌ள் உறைக்க‌வில்லையோ உமதண்டை...?


கால‌ம் தாழ்த்தி ப‌தில் சொல்லிய‌,
க‌றை ப‌டிந்த‌ வ‌ர‌லாறு உம‌க்கு வேண்டாம்...
க‌ல‌ங்கி நிற்கும் எம் ம‌க்க‌ளின்
க‌த‌ற‌ல்க‌ளை க‌ண் பாரும்.


ஏனெனில்; நாளை ந‌ம் ச‌மூக‌த்தின்
க‌ல்ல‌றைக‌ளில் உம் பெய‌ரும் சாப‌மாய்
ஒலிக்குமுன்........

வெள்ளி, பிப்ரவரி 06, 2009

உங்க‌ளோடு தான் நாமும்...


தினம் தினம் உங்கள் இன்னல்கள் கண்டு
நாங்களும் அழுகின்றோம்;
எங்கள் அகக் கண்களில் என்நேரமும் நீங்கள்
எங்களோடு தான்,

உங்கள் சோகங்கள்,
உங்கள் கதறல்கள்,
உங்கள் காயங்கள்,
உங்கள் வலிகள்,

ஐயகோ!.....எங்களுக்கு கேட்காமலில்லை,,,,

உங்கள் உடற் புண்கள்;
எங்கள் மனப் புண்கள்.


உங்களின் குமுறல்கள்;
எங்களின் இதயத்துடிப்பு.


உங்களின் வேதனை;
எங்களின் பெருமூச்சு.

யாருக்கில்லை கவலை உங்கள் இன் நிலை
கண்டு.....,,?
யாருக்கில்லை கோபம் தமிழன் தான் படும் துயர்
க‌ண்டு...,,,,,?

உட‌லால் தொலைவாகிப் போனாலும்...
உற‌வால் நானும் நீயும் ஒரு தாய்
பிள்ளைக‌ள‌ன்றோ.....?

நீங்க‌ள் தான் எங்க‌ள் உண‌ர்வு,,,
நீங்க‌ள் தான் எங்க‌ள் உற‌வு,,,
நீங்க‌ள் தான் எங்க‌ள் பாசம்,,,
நீங்க‌ள் தான் எங்க‌ள் நேச‌ம் அன்றோ.....,,, ?


ஆனாலும்,,,
நீங்க‌ள் உங்க‌ள் உட‌லால் ம‌ரிக்கிறீர்க‌ள்,,,
நாங்க‌ள்......?????
உங்க‌ள் உணர்வுக‌ளால் மரிக்கின்றோம் தின‌ம்
தின‌ம்.....

செவ்வாய், அக்டோபர் 07, 2008

"வாழ்க்கை வாழ்வதற்கே"


"Life is like a piano,
white keys R happy moments and
Black keys are sad moments
But remember both keys are
Played together to give
Sweet Music in life…………….. "
ஓர் கவிஞரின் அழகான வரிகள் இவை.

வாழ்க்கை என்றால் என்ன?சிலருக்கு அது ஓர் அழகான நீரோடை போன்று இருக்கலாம். சிலருக்கு அது பயங்கரமானதொரு சுனாமியை போன்றும் தோற்றமளிக்கலாம். எனினும் வாழ்க்கையை " இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை, துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை, இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம்" என்ற பாடல் வரிகள் நன்றாகவே உணர்த்தி நிற்கின்றனவல்லவா...?

எனவே இன்றிலிருந்தே உங்கள் கவலைகளை மூட்டை கட்டுங்கள், தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள், உங்களது அழுகை கண்ணீரை துடைத்தெறியுங்கள் வாழ்க்கையை வளமாக வாழ வழி வகுங்கள் ஏனெனில் "வாழ்க்கை வாழ்வதற்கே"

இதோ!............ இதை நான் ஒரு இந்து சமய புத்தகம் ஒன்றின் பின் அட்டை பகுதியிலிருந்து எடுத்தேன், இதை எழுதியவரின் பெயர் அதில் போடப்படவில்லை, எனினும் இந்த வைர வரிகளை நீங்களும் படித்து உங்கள் வாழ்க்கையில் பயனடைய வேண்டும் என்றதொரு நல்நோக்கில் இதை உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன்...


1.மிக மிக நல்ல நாள் - இன்று
2.மிக பெரிய வெகுமதி - மன்னிப்பு
3.மிகவும் வேண்டாதது - வெறுப்பு
4.மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி
5.மிகக் கொடிய நோய் - பேராசை
6.மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
7. கீழ்த்தரமான விஷயம் - பொறாமை
8. ந‌ம்பக் கூடாதது - வதந்தி
9. ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
10. செய்யக் கூடாதது - உபதேசம்
11.உய‌ர்வுக்கு வழி - உழைப்பு
12. நழுவ‌ விடக் கூடாதது - வாய்ப்பு

நன்றி.


திங்கள், அக்டோபர் 06, 2008

யாமறியோம் பராபரமே!



யார் துடைப்பார் இத் துயரை
எவ்வழி காண்போம் நம் உறவை
காணாமற் போதல் கதையாகிப் போன
எம் தேசத்தில்
எத்தனை வழிகளில் முயன்றோம்
அத்தனையும் பொய்யெனவே ஆயினவே,

மனுக்கொடுத்தோம் புகார் புரிந்தோம் -
இருந்தும்
மனுநீதிச் சோழனில்லையே நம் நாட்டில்

விடிய விடிய காத்திருந்தும்
விடியவில்லையே எம் பொழுது

ஒரு தாயின் விசும்பல்
ஒரு தாரத்தின் கதறல்
ஒரு குழந்தையின் கண்ணீர்
ம்........யாருக்கு அது வேண்டும் இப்
யு(பு)த்த பூமியில் ???

ஏன் எதற்கு என்ற கேள்வியில்லை
நாம் கேட்டால் அது நன்றும் இல்லை
யார் புரிவார் இச் செயலை
யாமறியோம் பராபரமே!

சனி, ஜூன் 07, 2008

ஏனோ.................?


65610 சதுர km பரப்பளவே கொண்ட அழகிய
குட்டித் தீவு நீ,
இந்து சமுத்திரத்தின் நித்திலம் நீ,
இயற்கை துறைமுகத்தால் புகழ் பெற்று விளங்கும்,
கேந்திர மத்திய நிலையமும் நீ.

ஆசியாவிலேயே எழுத்தறிவு வீதத்தில் உனக்கு
தனிச்சிறப்பு,
உலகிலேயே கண்தானம் செய்வதிலும் உனக்கு
முதற்சிறப்பு.

காசியப்பன் ஆண்ட பூமி நீ,
கருணை நிறை புத்த மதம் உன் தார்மீகம்.

விபுலானந்த அடிகள் பிறந்ததும் இங்கே தான்,
அன்பு நிறை யோசவ்வாஸ் மாமுனி மறை
பரப்பியதும் உன்னில் தான்.
கிரிக்கெட்டில் புகழ் உனக்கு,
பெரும் தோட்ட தேயிலை பயிர்ச் செய்கை
பலம் உனக்கு.


மாணிக்க கல் விளையும் பூமி நீ,
மலை வளங்களும் உன்னில் பிரமாதம்.

இவை எல்லாம் கொண்டு சிறப்புற்று
விளங்கும் நீ,,,

கொலைகளும் தற்கொலைகளும் மலிந்த,
இரத்த ஆறு கரைபுரண்டோடும்
ஓர் யுத்த பூமியாகவே எல்லோராலும்
அறியப்படுகின்றாயே அது ஏனோ........?