என் படைப்புக்களுக்கான ஒரு பயிற்ச்சிக் களமாகவே இதனைப் பார்க்கிறேன், என்னாலும் முடியுமா முயன்று பார்க்கிறேன்...
செவ்வாய், டிசம்பர் 29, 2009
தவிப்பு!
தொடர்ந்து ஜெயிக்கும் இவ் வுலகில்
கடவுளையும் உண்மையையும்
தேடித் தேடியே களைத்துப் போனான்
அப்பாவி நியாயஸ்தன்!
வியாழன், டிசம்பர் 24, 2009
வாரம் ஒரு ஹைக்கூ!
டிசம்பர் 25
குடும்பத்தில் அடுக்கடுக்காய்
குழந்தைகள் இறந்து போயின
சுனாமியின் கோரம்;
இத்தனை வருடங்கள் கழிந்தும்
கிறிஸ்துமஸ் கொண்டாடுவதா இல்லையா?
கிறீஸ்தவ குடும்பத்தில்
இன்னமும் திண்டாட்டம்!
புதன், டிசம்பர் 16, 2009
வாரம் ஒரு ஹைக்கூ!
நிரந்தர முகவரி;
விண்ணப்ப படிவத்தில் நிரப்பும் போதெல்லாம்
வலித்தது வாடகை வீட்டில் குடியிருப்பவனின்
மனம்!
செவ்வாய், டிசம்பர் 15, 2009
இவர்களுக்கான நமது பதில் தான் என்ன?
எங்கே நாம்?
எனக்கு தெரியவில்லை சத்தியமாய்
எம்மை போன்று சிறுவர்கள் தாம் இவர்களும்
ஆனால் வாழ்வியலோ வேறு
காலில் ஆணி குத்தி விட்டதோ
அலறி அடிக்கின்றோம் ஐயோ அம்மா!
கையில் கறண்ட் அடித்து விட்டதோ
பதறித் துடிக்கின்றோம் சில நிமிடங்கள் தனும்
ஆனால் இங்கோ,
வாழ்க்கையே முள்ளுக் கம்பிகளாய் இவர்களுக்கு!
துள்ளித் திரிய வேண்டிய வயதில்
கையில் பிச்சைப் பாத்திரம்
அன்றாட உணவுக்கோ
அனுதினமும் அல்லல் படும் நிலை
TV யில் அருவருப்பான ஒரு காட்சியா?
அருவருக்கிறது எங்களுக்கு உணவும் சேர்ந்து
அன்றாட உணவு அதிகமாகி விட்டதா?
திறந்து கிடக்கிறது குப்பைத் தொட்டி
அப்பொழுதெல்லாம் இவர்கள் எமக்கு தூரமாகிப் போய்விடுகிறார்களா???
வேற்றுமை கூடாது தான்
ஆனால் எனக்கு சத்தியமாய் புரியவில்லை!
கடவுளே எங்களிடத்தில் வேற்றுமை பாராட்டுகிறாரா என்ன?
ஏன் இவர்களை வேற்றுமையாய் படைத்து விட்டார்?
ஒரு நிமிடம் இவர்களுக்காக சிந்திப்போமா?
சனி, நவம்பர் 21, 2009
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!
இமைகள் தாழ்ந்தன
விழிகள் அழுதன
என் முகம் நோக்காத உன் பார்வையினால்!
என் கண்களில் நான் நாணம் கொண்டேன்
உன் மேல் நானும் காதல் கொண்டேன்
மனச் சிறையில் அதனை ஒளித்து வைத்தேன்
ஆனால் விழித் திரையில் படமாய் விரிந்ததடா!

கண் நிறையக் காதல்
மனம் நிறைய நேசம்
நீ இல்லாத தேசமோ நான் என்றுமே வாழ விரும்பாத என்
வாசம்!
என் முகத்தை திரைச்சீலை போட்டு மறைத்தாலும்
என் விழிப் பார்வை காட்டிக் கொடுத்து விடுகிறதே
உன் மீதான என் காதலை!

அடி போடி கள்ளி
உன் முறைத்த விழிப் பார்வைகள் கூட
நம் காதலை சொல்லிவிடும் தாஜ்மகால் சிற்பங்கள்!
கண்களிலோ வெட்கம்
முகத்திலோ காதல்
இதயம் முழுவதுமோ நீ!
கண்களால் உனை தேடுகிறேன்
நீ என் இதயத்துள் இருப்பதை மறந்து விட்டு!

எல்லோர் கண்களிலும் பெரியவனாய் தெரியும் நீ
என் கண்களில் மட்டும் ஏனடா சிறு குழந்தையாய் மட்டுமே
உன் மீது நான் கொண்ட காதலை
யாரிடமும் சொல்லாதே என்று என்
நண்பியிடம் சொல்லத் தெரிந்த எனக்கு
என் கண்களிடம் சொல்லத் தெரியவில்லையே
பார் எப்படி காட்டிக் கொடுத்து விடுகின்றன நம் காதலை!

உன் பார்வை அம்புகளால் நீ என்னை கொலை செய்யும்
போதெல்லாம்;
என் இதயம் புதுப் பிறப்பு அடைகின்றதே தோழி!
காதலிடம் இருந்து தான் பிறந்து கொண்டதா வெட்கம்?
உன் மேல் நான் காதல் கொண்டதும்
என் கண்கள் வெட்கப் பூக்களை அணிந்து கொண்டனவே!
என்றுமே விடுதலையாக விரும்பவில்லை
உன் விழிச்சிறையில் அகப்பட்டுக் கொண்ட பின்னர்!
காற்றிடம் இருந்து கூட தப்பி விடலாம் நீ
ஆனால் என் கண் அசைவிலிருந்து தப்ப முடியாத படிக்கு என்
காதல்!
நம் காதலில் தானடி
இதயங்கள் பேசிக்கொண்டன
கண்கள் நேசிக்க கற்றுக் கொண்டன!
ஞாயிறு, அக்டோபர் 11, 2009
பறக்க எனக்கும் ஆசைதான்!

பறக்க எனக்கும் ஆசைதான்,
ஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட குருவி!
எம்பிக் குதித்து வானத்தில் பற்ந்து
வட்ட மிட்டு வலம் வந்து
பின் தரையை நோக்கி விழுந்து
மரக்கிளைகளில் தாவி அங்கும் இங்கும் ஓடி
அலைந்து மழையில் நனைந்து
கும்மாளம் அடித்து குதூகலித்து
பின் மீண்டும் பறக்க எனக்கும ஆசை தான்
ஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட குருவி!
என் நண்பர்கள் போல் இரைதேடி அலைந்து
களைப்புற்று கூடு திரும்பி
என் மனைவி மக்களுடன் உண்டு குடித்து மகிழ்ந்து
அவர்கள் உண்பதை ரசித்து; கர்வப்பட்டு
பின் பறந்து மாலை வேளை உணவு தேடி
மீண்டும் மீண்டும் களைப்புற்று ,என்
கூடு திரும்ப எனக்கும் ஆசை தான்
ஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட குருவி!
இவ் விண்வெளி எங்கும் பறந்து
கண்டம் விட்டு கண்டம் தாண்டி
அளாவளாவி சிலிர்ப்புற்று,
மலை மேடு முகில் தாண்டி
சமதரைகள் எங்கும் பறந்து திரிந்து
இயற்கையை ரசித்து இன்பத்தில் திழைத்து
இதமாய் பொழுது போக்க எனக்கும் ஆசைதான்,
ஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட குருவி!
இவ் வீட்டின் எஜமான் என்னை வாங்கி வந்தார் ஆசையாய்
தன்னாசை மகள் கேட்டதற்காய், ஆனால்
அவரோ அறிந்திருக்கவில்லை என்னாசை
பறக்கும் ஆசை என. ஏனெனில்;
நானோ கூண்டுக்குள் அடைபட்ட குருவி!
தாய் சொன்னார் போதும் இச் சிறு கூடு என
மகள் சொன்னார் இல்லை இன்னும் பெரிதாய் வேண்டும்
என் குருவி சுதந்திரமாய் நடமாட என
எது என் சுதந்திரம்???..... தெரியாத
இவ் வேடிக்கை மனிதர்களுக்காக
வேடிக்கை பொருளாகிவிட்ட நானோ;
கூண்டுக்குள் அடைபட்ட குருவி!
திங்கள், செப்டம்பர் 07, 2009
ஊனம் யாருங்க...?
நான் படித்த பாடசாலையில் ஒரு சகோதரி இருந்தார். அவர்களும் என்னைப் போல் ஒரு மாணவி தான். ஆனால் அவவிற்கு ஒரு கை வளர்ச்சி அடையாத நிலையில் காணப்பட்டது. நான் அம் மாணவியை கவனித்திருக்கிறேன் அவர் எப்பொழுதும் தனியாக இருந்ததாக தான் எனக்கு ஞாபகம். அவர் எப்பொழுதும் எங்கள் எல்லோரையும் பார்த்து அழகாக ஒரு புன்னகை செய்வார். அடிக்கடி அவாவை பாடசாலையில் காண்பதாலோ என்னவே அது எங்களுக்கொரு பெரிய வித்தியாசமாகப் படவில்லை. ஆனால் நாங்கள் யாரும் அவவுடன் பெரிய நட்பு வைத்து கொண்டதாகவோ அல்லது அம் மாணவியின் வகுப்பு பிள்ளைகள் யாரும் அவருடன் நண்பிகளாய் பழகினதையோ நான் காண்டதில்லை. இது ஏன்? அவருடன் நட்பு வைத்துக் கொள்வதை நாங்களோ அல்லது அவரின் வகுப்பு மாணவர்களோ கொளரவ குறைச்சலாக கருதினதாலா?
பொதுவாக நாம் எல்லோரும் என்ன நினைப்போம் எங்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்க வேண்டும் அவர்கள் எப்போதும் எங்களுடன் அன்பாக இருக்க வேண்டும் மதிக்க வேண்டும் என்றெல்லாம் தானே? எல்லோரும் சேர்ந்து விளையாடும் போதோ இல்லை கல்வி கற்கும் போதோ நாம் மட்டும் தனித்து விடப்பட்டால் எங்களது மனநிலை எப்படி பட்டதாக இருக்கும்? அதே போல் தானே அவர்களது மன நிலையும் இருக்கும். இதை நாம் ஏன் சற்றும் சிந்திப்பதில்லை? சற்று நிதானமாக சிந்திப்போமானால் நாங்கள் அவர்களோடு நட்பு வைத்துக் கொள்ள விரும்பாதது மட்டுமன்றி அவர்களை ஏதோ மனிதர்களே இல்லாதது போல் பிரித்து வைப்பது அவர்கள் மனதில் ஒரு வேதனையை விரக்தியை தாழ்வு மனப்பாண்மையை உருவாக்கும் என்பதை நாங்கள் ஏன் யாருமே ஒருபோதும் உணர்ந்து கொள்வதில்லை? இதில் உண்மையான ஊனர்கள் யார்? நாங்களா? இல்லை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு எப்பொழுதும் ஒரு புண்ணகையுடன் வலம் அச் சகோதரியா?
எனக்கு ஒரு நண்பி இருந்தார், இப்பவும் இருக்கிறா. என் உயிர்த் தோழி எனறே கூறலாம். அவவிற்கு ஒரு அக்கா. என் நண்பியை ஒரு தேவதை போல் படைத்த இறைவன் என் நண்பியின் சகோதரியை மூளை வளர்ச்சியற்ற (மன்னிக்கவும்) ஒரு பிள்ளையாக இவ் வுலகில் அவதரிக்க விட்டு விட்டான். ஆனால் அவர்களுக்கு ஒரு அம்மா, இல்லை இல்லை அதற்கும் மேல். அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? " கடவிளிற்கு தெரியும் யாருக்கு என்ன பிள்ளை கொடுக்க வேண்டு மென்று, அதனால் தான் அந்த இறைவன் எனக்கு இப் பிள்ளைய கொடுத்திருக்கிறான். வேறு யாருடைய கைகளிலாவது இப் பிள்ளை கிடைத்திருந்தால் என்ன பாடுபடும், நான் நன்றாக வளர்ப்பேன் என்று தெரிந்து தான் கடவுள் எனக்கு இப் பிள்ளையை தந்துள்ளார்" எனக் கூறுவார். இப்படி ஒரு அற்புதமான தாயை நீங்கள் எங்காவது கண்டதுண்டோ?
சாதாரணமாக ஒரு மனிதனை எடுத்து கொண்டோமேயானால் அவனது சிந்தனை செயற்பாடுகள் எப்படிப் பட்டதாக இருக்கும்? நாங்கள் அழகாக இருக்க வேண்டும், நாம் மற்றவரை கவரும் வண்ணம் இருக்க வேண்டும் எங்களை எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்பதாகப் பற்றித் தானே? சரி அதை தான் விடுங்களேன் இப்பொழுது ஒரு பெண்ணோ அல்லது பையனுக்கோ திருமண வரண்கள் பார்க்கும் பொழுது நாம் என்ன சொல்கின்றோம் இந்தப் பொண்ணுக்கு மூக்கு கொஞ்சம் சப்பை, அந்தப் பொடியனுக்கு தலையில மொட்டையே விழுந்திடிச்சு. இவ்வாறாக நிறம், உயரம், பருமன் அப்பப்பா... எல்லாவற்றிலும் அல்லவா குறைகள் கண்டு பிடிக்கிறோம்? அவர்களை நிராகரிக்கின்றோம். இப்படி உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ்பவர்களிலேயே ஆயிரம் குறைகள் கண்டு நிராகரிக்கும் நாஙகள் இவ்வாறு உடல் ரீதியாக ஊனமுற்றவர்களை எமது அன்புக்குரியவர்களாக ஏற்றுக் கொண்டு வாழத் தயாராக உள்ளோமா?
எனது அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள நண்பர் ஒருவர் ஒருமுறை என்னிடம் கூறினார் தனது தோழி ஒருத்தி படைப்பிரிவில் இருக்கும் இரு கால்களையும் இழந்த ஒருவரை விரும்பி திருமணம் முடித்தாக. தான் ஏன் என்று கேட்ட வேளை உண்மையான அன்பென்பது இதில் தான் உள்ளதாகவும் தான் அவரை மனமார நேசிப்பதாகவும் கூறினாராம். எனக்கு அப்பொழுது அச் சம்பவம் பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் இதன் உண்மையை யோசித்துப் பாருங்கள் உடலலவில் ஆரோக்கியமாக இருப்பவிர்களிடமே ஆயிரம் நொண்டிச் சாட்டுக்கள் சொல்லி நிராகரிக்கும் நாங்களும் இப்படிப் பட்ட மனநிலமை உள்ள அப் பொண்ணைப் போன்றவர்களுக்கு முன்னால் மனதளவில் நாம் எப்படிப் பட்ட ஊன வாதிகளாக இருந்திருக்க வேண்டும்?
ஊனம்எவ்வாறு ஏற்படுகின்றது? நாம் கடவுளை நம்பினேமானால் எங்களைப் படைத்த அதே இறைவன் தான் சற்றுக் கூட இரக்கமில்லாமல் அவர்களையும் படைத்திருக்க வேண்டும். இதற்காக அவர்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயமாகும்? விஞ்ஞான உலகினை எடுத்துக் கொண்டோமேயானால் பரம்பரை அலகுக் காரனிகள் அல்லது ஏதாவது குறைபாட்டுக் காரணங்கள் இவ்வாறான ஊனங்கள்ஏற்படுவதற்க்கு வழிவகுக்கின்றது. அதற்காக அவர்களை புண்படுத்துவது எந்த வகையில் தர்மமாகும்? சரி இது எல்லாவற்றையும் தான் விட்டு விடுங்களேன் அநேகமாக விபத்துக்கள் சண்டைகள் மூலமும் இவ் ஊனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்காக எல்லாம் நாம் இவர்களை தள்ளி வைத்தோமேயானால் நாளைக்கு அதே விபத்து எங்களுக்கும் ஏற்பட்டு நாங்களும் ஊனமாகிப் போனால் எங்களையும் யாராவது வெறுத்தொதுக்கிப் போனால் அப்பொழுது அதை தாங்குவதற்கு தான் எங்களிடம் தைரியம் உள்ளதா? அப்படிப்பட்ட நாங்கள் ஏன் இவ்வாறானவர்களை வெறுத்தொதுக்க வேண்டும்? சிந்திப்போமா நண்பர்களே?
ஒருவரை புண்படுத்துவதோ மன வேதனைக்கு உள்ளாக்குவதோ எவ்வளவு பெரிய மாகா மாகா மட்டமான செயல் என்பது எங்களுக்குத் தெரியாததா என்ன? ஒருவரின் வேதணையை அழுகையை கண்டு நாங்கள் ரசித்தோமேயானால் , "இலங்கை இராணுவம் தான் எதிரிகளை மிலேச்சத் தணமான முறையில் கொன்று குவித்து மகிழ்ந்து வருவது அநாகரிகத்தின் உச்சக் கட்டம் என்றால்? இவ்வாறான மனிதர்களை கேலி கிண்டல் பேசி மனவேதனைப் படுத்தும் நாங்கள் அநாகரிகத்தின் ஆரம்பக் கட்டத்தில் அல்லவா உள்ளோம்?
எனவே நண்பர்களே ஊனம் என்பது ஒருவரின் உடலில் அல்ல மனதில் தான் உள்ளது என்று எல்லொரும் சொன்ன நல் மொழியை தான் நானும் இங்கு முன் வைக்கிறேன். அவர்களும் எம்மை போன்றவர்களே. நம்மைப் போன்ற உணர்ச்சிகள், சிந்தனைகள் தான் அவர்களுக்கும் படைக்கப் படைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களை பரிதாபக் கண்களோடு பார்ப்பதற்குப் பதில் அவர்களை தட்டி உற்சாகப் படுத்துங்கள்.நிட்சயாமாக அவர்கள் அதை தான் அதை மட்டும் தான் எங்களிடம் இருந்து எதிர் பார்ப்பார்கள். சரி, நாங்கள் அவர்களை நண்பர்களாக தான் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்களை ஏதோ மூன்றாம் மனிதரைப் போன்று பார்ப்பதையாவது விட்டு விடுவோம்.ஏனெனில்; நாங்கள் அவர்களிடம் பார்க்கும் அல்லது தேடும் ஊனம் அவர்களிடம் அல்ல எங்கள் மனதில் தான் ஒளிந்து கொண்டிருக்கிறது!
வெள்ளி, செப்டம்பர் 04, 2009
என் மனதில் பட்டவை - 01
வீதியில் சுடப்பட்டு கிடக்கின்றான் ஈனத்தமிழன்
முகாம்களில் கற்பழிக்கப்படுகின்றனர்
இளம் பெண்கள்; உண்மைகள் மறைக்கப்பட்டு
வெறும் பத்திரிகைகளில் மட்டும் சிரித்தபடி
மனிதநேயம்!
***
வக்கேஷன்க்கு வந்த குழந்தைக்கு
கைகளில் நுளம்பு கடித்ததற்காக
மனைவியை திட்டுகிறான் கணவன்
கைகளை இழந்த நிலையில்
அகதி முகாம்களில் எம் குழந்தைகள்!
***
3:1 ஆகி விட்ட விகிதாசார பரம்பல்
கோடிப் பணமும் மாடி வீடும் கேட்டபடி
கலியாணச் சந்தையில் ஆண்கள்!
குறிப்புப் புத்தகங்களை தூக்கியபடி
அலைந்து கொண்டிருந்தாள் தாய்
பாடப் புத்தகங்களை தூக்கி எறிந்த
தன் மகனிற்காக!
***
என் தாய் நாட்டிற்கு நிகர்
எதுவும் உண்டே இவ் வுலகில்?
ஒவ்வொரு புலம் பெயர் வாசியின்
மனங்களிலும் சிக்கித் தவிக்கின்றது ஏக்கம்!
***
ஜனநாயக நாட்டில்
பள்ளிகளில் கேட்கப் படுகின்றன
ஜாதிச் சான்றிதழ்!
பி.கு: குறிப்புப் புத்தகம் = ஜாதகப் புத்தகம்
வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009
இப்படிக்கு நாங்கள்!

பசியாற எதுவுமில்லை
பச்சத் தண்ணி குடிச்சதால
பல நோய்கள் வந்து போய்று
பாடப் புத்தகம் தூக்கினாலோ
பள்ளி ஞாபகங்கள் கண்ணை நனைக்குது
பனை ஓலை கிடுகு வடலி
பம்பரம் ஊஞ்சலாட்டம் கிளித்தட்டு
பசுமையான நினைவுகள் யாவும்
பாழாய் போய் நாட்கள் ஆயிட்டு;
பசிக்குது எனக்கு இப்ப
பசியாற எதுவும் இல்லை
பச்சை மரத்தடி வகுப்பறை
பாடங்கள் இங்கு நடக்குதிங்கு
பார்ப்பவை நினைப்பினம் எம் வாழ்வு
பரவாயில்லை ஏதோ போகுதென்று
படும் கஷ்டம் நாங்கள் அன்றோ
பார்ப்பவர் உமக்கா விளங்க போகுது?
பரிதவிக்கும் எமக்கு மீட்டுத் தர இயலுமன்றோ...?
இப்படிக்கு நாங்கள்,
சனி, ஆகஸ்ட் 08, 2009
அக்கா அண்ணா நம்மள கொஞ்சம் நினைச்சுப் பாருங்க!

சொந்த நாட்டில் அகதிகள் நாம்
சொல்லொண்ணா துயரம் அது நம் சொத்துக்கள் தாம்
பட்டினி வாழ்வு அது இப்போ எம்முடன் தான்
பகலும் இரவும் நம் பொழுது இப் படலைகளில் தான்
சுத்தமான தண்ணீர் அது நாம் கண்டு கன நாளாச்சு
சுகந்த வாழ்வு அது இனி எமக்கு கணவில் தான்
அப்பா அம்மா அவர்கள் எங்கே அடுத்த முகாமிலா?
ஆமிக்காரன் சொன்னான் நாம் இனி அனாதைகளாம்?
வெளியில் இருக்கும் அக்கா அண்ணா நம்மள கொஞ்சம்
நினைச்சுப் பாருங்க
வேற்றுக் கிரக மனிதரில்லை நாமும் உங்கள் உடன் பிறப்புக்கள்
தான்!
செவ்வாய், ஜூலை 14, 2009
உன் மெளனங்களின் மொழி...
உன் மெளனங்களை எல்லாம் மொழி பெயர்த்தேன்
அட அதில் என் பெயர் மட்டும் தான் ஒலித்துக்
கொண்டிருந்தது!
இன்று காதல் தேசத்தின் பெருவிழாவாம்
ஆமாம் இன்று தான் நீ முதன் முதலில் காதலில்
நுழைந்த நாளாம்...
உன் முகத்தில் இத்தனை வானிலை மாற்றங்களா?
காரணம் காதல் தானோ?
சனி, ஜூலை 04, 2009
நீ வாழ நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்!

திருமண பந்தம் அது நம் சொர்க்கத்தின்
உன் அகம் செழிக்க
உன் சொந்தம் நாம் கண்டு
புதன், ஜூலை 01, 2009
Exam Tension…

விநாடி முட்கள் நகர அவசர அவசரமாக
உண்டு குடித்து கடைசி நொடிப் பொழுது கூட
மறவாமல் புத்தகம் விரித்து மனக் கணிதம் படித்து
பல Bus போக ஒரு Bus பிடித்து
பரீட்சை மண்டபம் நுழைந்து
Exam Sheet சகிதம் வாத்தியார் வர
இதயம் நடை பயிலும் நெஞ்சாங் கூட்டில்
6 மாதம் படித்த படிப்பு
1/2 நாளில் அரங்கேறும் கூத்து
சந்தோஷமாக பாதி சந்தேகமாக பாதி
வாத்தியார் கையில் திணித்து
அதன் பின் சுற்றும் முற்றும் பார்த்து
தெரிந்த நண்பர்களுக்கு Hi சொல்லி
Bye சொல்லி மீண்டும் வந்தேன் அதே
கடுகதி ரயில் ஓட்டம்!
வெள்ளி, ஜூன் 19, 2009
எனக்கென்றொரு தேவதை...
உன் வாசம் வீசும் பாதையில் தான்
என் சுவாசம் செல்ல துடிக்கின்றது...
ஒரு நொடிப் பொழுது கூட எனக்கு வேண்டாம்
உன் கண்ணிமைப் பொழுதென்றை தவிர...
வாழத்துடிக்கிறேன் இல்லையேல் செத்து போகிறேன்
உன் காதல் கடலில்...

தங்கத்தை விட வைரம் விலை உயர்ந்ததாமே
யாரடி சொன்னார்கள் உன் பெருமை
அறியாதவர்கள்...
எவ் நகையும் சிறக்கவில்லையடி எனக்கு
உன் புன்னகையை தவிர...
வியாழன், ஜூன் 18, 2009
மதம் (இது யானைக்கு பிடிப்பது)

உன்னைப் போல் உன் அயலவனையும் நேசி வாழ்ந்து காட்டினார் இயேசு பிரான்
அயலவன் பசித்திருக்க நீ உணவருந்தாதே மொழிந்து சென்றார் நபிகள் நாயகம்
உயிர்களை கொல்லாதே போதனை செய்தார் கொளதம புத்தர்
1992 ஒக்டோபர் 6 பாபர் மசூதி இடிப்பு. கலவர பூமியாக மாறிப் போனது இந்திய பூமி. மத ஒற்றுமையும் மனிதநேயமும் அற்றுப் போன கறுப்புநாள்.
நைஜீரியாவில் கிறீஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் நடந்த மதக் கலவரத்தில் 420 க்கும் அதிகமானோர் பலி.
குஜராத் மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பலி ,50 க்கும் மேற்பட்ட அப்பாவி ராமபக்தர்கள் பலி.
சனி, மே 16, 2009
எல்லாம் காதலினால்...

உன் நினைவுகளை சுமந்த படி தான்
எப்பொழுதும் என் இதயம்..

உன் அன்பு பேச்சுக்களை மட்டுமல்ல
உன் கோப வார்த்தைகளையும் தான்
ரசிக்கிறது என் மனது...

இப்பொழுதே கனவு கான ஆரம்பித்து விடுகிறேன்
உன்னை எப்படியெல்லாம் பெரிய ஆள் ஆக்க

உன் சிரிப்பு
உன் கோபம்
உன் பாசம்
உன் பந்தம்
ஐயோ உன்னை முழுவதுமாக பிடித்து போகின்றதே
நீ ஒவ்வொரு முறையும் என்னவென்று கேட்கும்
போதெல்லாம் எனக்கு மறந்து போய் விடுகின்றது
நான் என்னவெல்லாம் உன்னிடம் பேச வேண்டுமென்று ?
எப்பொழுதும் உன்னிடம் மட்டும் தான்
பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்று அழிச்சாட்டியம்
பண்ணும் மனதை நான் என்ன செய்வது?
எல்லாவற்றையும் உன்னிடம் தான் சொல்ல வேண்டும்
துடிக்கிறது என் இதயம்...

செவ்வாய், ஏப்ரல் 14, 2009
சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

விமோச்சனம் தருக
பரிதவிக்கும் எம் மக்கள்
பாரங்கள் களைக
எரிதியாய் குரோதியாய்
எமை எரிக்கும் நிலை நீங்கி
சரி சமனாய் சமத்துவமாய்
சாதிக்கும் வரம் அருள்க
புத்தாண்டே துணை செய்க!
புதுஆண்டே துணை புரிக!
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
ஞாயிறு, ஏப்ரல் 12, 2009
சித்திரை புத்தாண்டுக்கு முந்திய சில கேள்விகள்...?(இது சரியா... இல்லை தவறா...?)

இன்னும் இரு தினங்களில் புது வருடம். தமிழ்-சிங்கள புதுவருடம்.உலகிலுள்ள அனைத்து தமிழர்களும் குறிப்பாக இலங்கையில் சிங்கள மக்களும் தமது புத்தாண்டை வரவேற்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இதேவேளை புதிதாக அனைத்து தமிழ் மக்களிடமும் எழுந்துள்ள ஒரு கேள்வி தமிழர்களுடைய புதுவருடம் தையிலா...? அல்லது சித்திரையிலா என்பது தான்? கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆரம்பித்து வைத்த இக் கேள்வியை இன்றைய பதிவர் கமல் வரை கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள்? இக் கேள்விக்கான பதிலை ஒரு சாரார் தையில் தான் தமிழர்களுடைய புது வருடம் கொண்டாடப் பட வேண்டுமென்றும் ஒரு சாரார் இல்லை இல்லை பழமையை என்றும் மாற்றுதல் ஆகாது சித்திரையில் தான் கொண்டாடப் பட வேண்டும் என்றும் தமது வாக்குகளை குத்திக் முகொண்டிருக்கும் இதே வேளை கத்துக்குட்டியாகிய நானும் (மன்னிச்சுக் கொள்ளுங்க) இதைப் பற்றிய எனது கருத்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம் என்று ஆவலாக உள்ளேன்...
முதலில் தை...
தனித்திருத் திங்கள் தரணியில் தோன்ற
தைமகள் தான் அவதரிக்க
தமிழர் நாம் குதூகலிக்க
வாராயோ நீ மீண்டும் நலம் தாராயோ
எம் பொழுதும் எப் பொழுதும்
பகலவன் தான் வான் சிறக்க
கொண்டாடுவோம் இங்கு நாம் பண்பாடுவோம்
தை மகளை தமிழ் மகளாய்!
தை மாதம் தமிழர்கள் எமக்கு பொன்னான மாதம். தை பிறந்தால் தமிழர் எமக்கு வழி பிறக்கும் என்று கூறுவார்கள். அதிகாலைச் சூரியன் தன் பொற் கரங்களை விரிக்க சேவல் கூவி நாம் துயில் எழும்ப ஆலயக் கோயில்களில் மணி ஓசைகள் முழங்க தமிழர்களாகிய நாம் வயல் வரம்புகளில் இறங்கி நெற் கதிரிகளை அறுவடை செய்து அரிசி எடுத்து கரும்பும் நாட்டி பொங்கல் பொங்கி சாமிக்கும் படைத்து அப்பப்பா... தை மாதமல்லவோ அழகிய தமிழ் மாதம். எங்கும் எதிலும் மகாலட்சுமி கடாட்ஷம், பொங்கும் மலரும் மங்களகரம். நமஸ்கார மாதம் வணக்கத்துக்குரிய எங்கள் தை மாத்ம். எனவே இவ்வளவு நண்மை பயக்கும் தை மாதம் தானே எங்களுக்கு புதுமை படைக்கும் மாதம் புது மாதம் அதாவது புது வருட மாதமன்றோ?
ஆனாலும் சித்திரை...
சித்திரைப் பெண் சிரிக்கின்றாள் தன் முகம் மலர்ந்து
எத் திசையும் நற் திசையாய் இவ் வருடம் எமக் கருள
எக் கணமும் எம் துயர்கள் இனி அகல
சித்திரையே நற் தருவே நீடூழி வாழ்க வென்று
சித்திரைப் பெண் சிரிக்கின்றாள் தன் முகம் மலர்ந்து!
சித்திரை மாதம் வருடத்தில் நான்காவது மாதம். அதாவது ஒரு காலாண்டு கழியும் மாதம். இலங்கையில் நிதியாண்டு தொடங்கும் காலம். கத்தரி வெயில் சுட்டெரிக்கும் மாதம். தமிழர்கள் தம் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த கஷ்டப்பட்டு உழைக்கும் காலம். ஆனாலும் சிறப்பான மாதம். இலங்கையில் சித்திரை வந்தாலே அனைவரினது முகத்திலும் புன்சிரிப்புக்கள் தவழத் தொடங்கிவிடும். காரணம் விசேட காரணம் தமிழ் சிங்கள புதுவருடம். ஏராளமான விடுமுறைகள் உண்டு. பாடசாலை விடுமுறையும் உண்டு. எனவே அனைவரும் குடும்ப சகிதமாக ஒற்றுமையாக ஒன்று கூடி சுற்றுலா செல்லுதல், விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல், புத்தாடை அணிதல். பட்டாசு கொளுத்துதல்(இப்ப அனுமதி தந்திட்டாங்க) என ஓரே அமர்க்களமாகத் தான் இருக்கும் இம் மாதம். சித்திரை திங்களன்றோ சிறப்பான திங்கள் என்று கூற வைக்கும் இம் மாதத்தில் அனைவரினது வீடுகளிலும் சித்திரைப் பெண் வந்து உட்கார்ந்தும் விடுவாள். ஏனெனில் இலங்கையில் இது தமிழ் மட்டுமல்ல தமிழ்-சிங்கள மன்னிக்கவும் சிங்கள-தமிழ் புது வருடமன்றோ!
இலங்கை தான் இன்றைய திகதியின் கதா நாயகன். அத்திப்பட்டி முருகேசு முதல் அமெரிக்காவின் பில் கேட்ஸ் வரை இலங்கையைப் பற்றி இன்றைய திகதியில் அறியாதவர்கள் எவருமே இல்லை எனக் கூறலாம். காரணம் கின்னஸ் சாதனைகள் ஒன்றுமில்லை இலங்கையில் நடக்கும் யுத்தம் கொடூர யுத்தம். இவ் யுத்தத்திற்கு பல்வேறு பட்ட அரசியல் காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மைக் காரணம் இன வேறுபாடு. அதாவது எமது சகோதர மொழி மக்களாகிய சிங்கள் சமுதாயத்திற்கும் எமது தமிழ் சமுதாயத்திற்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சிறு பொறி இன்று கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. ஆக மொத்தத்தில் இது ஒரு இனப் போர், ஒரு இனத்திற்கு எதிரான போர் என்றெல்லாம் பல்வேறு பட்ட வியாக்கியானங்களை பலர் கூறிக்கொண்டிருக்கையில் (சத்தியமா நான் இங்க அரசியல் பேச வரலைங்க)நான் எடுத்துக் கொண்ட விடயம் இது அல்லவே. நான் இங்கு கூற வந்தது சித்திரைப் பெண்ணை பற்றியன்றோ..., எமக்கு வரப்போகும் புது வருடத்தை பற்றியன்றோ...
அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்றா கேட்கிறீர்கள்? இருக்கவே இருக்கிறது சம்மந்தம், மிகப் பெரிய சம்மந்தம். ஆரம்ப காலங்களில் ஏற்பட்ட சிறு சிறு மனக் கசப்புக்கள், கோள் மூட்டல்கள், பொறாமைகள், பகைகள், விரோதங்கள் போன்றன எமது சகோதர மொழி மக்களுக்கும் எமக்கும் இடையில் ஒரு விதமான குரோத மனப்பாண்மை உண்டாக காரணமாகி பின்னர் அது வெறுப்பாகி இன்று அது பாரிய யுத்தம் என்னும் நிலைக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கும் நிலையில் எங்களையும் எங்கள் சகோதர மொழி மக்களையும் ஒன்று படுத்தி ஒற்றுமையுடனும் பரஸ்பரத்துடனும் புன்னகைக்க வைப்பது இவ் எமது சித்திரை புத்தாண்டு தான் என்று கூறினால் மிகையாகாதன்றோ! நம் இரு இனமும் சேர்ந்து கொண்டாடும் மகத்தான நாள் அதுவன்றோ! அட ஆமாங்க அன்றைய நாளில் பூக்கும் அமைதி, சின்ன சின்ன மகிழ்ச்சிகள், புன்சிரிப்புக்கள், ஆலய பரிசுத்தம், கோயில் மணி ஓசை,எங்கும் எதிலும் சுபீட்சம், சந்தோஷம், தெய்வீகம் இவை யாவும் நம் இரு இனமும் சேர்ந்து கொண்டாடும் பண்டிகை என்றதால் ஆனதன்றோ? அச் செல்வம் தரும் சித்திரையை நம் நட்புறவை கொண்டு வரும் புத்தாண்டை நாம் தையில் எவ்வாறு மாற்றியமைக்க முடியும்?
உள் நாட்டு போர் வெற்றி தோல்விகளால் அடிக்கடி தமது முக பாவங்களை மாற்றிக் கொள்ளும் எமது சகோதர மொழி நண்பர்கள் தங்களுடன் சேர்ந்து நாங்களும் கொண்டாடும் புது வருட தினத்திலன்றோ உளமார சிரிக்கின்றார்கள், சிநேகத்துடன் கை குலுக்குகிறார்கள், தோழமையுடன் வாழ்த்துதல்களை பரிமாறிக் கொள்கின்றார்கள், பிரியத்துடன் தமக்குப் பிடித்தமான எமது சிற்றுண்டிகளையும் சுவைத்து உண்கின்றார்கள். நாமும் தான் அன்றோ? அன்று தான் அன்றைய நாளில் தான் எமக்கும் அவர்களுக்குமான இனத் துவேசம் காற்றைக் கண்ட இலவம் பஞ்சைப் போன்று பறந்தோடி விடுகின்றதன்றோ? எங்கும் எதிலும் மகிழ்ச்சி சந்தோஷம் மட்டும் தான் உணரப் படுகின்றதன்றோ? அவனோ இல்லை அவளோ சொல்லுகின்றனர் அட, இவர்கள் எமது சகோதர மொழி மக்கள். இவர்களும் நம்மை போன்றவர்களே. வாருங்கள் எல்லோரும் சேர்ந்து வரவேற்போம் நமது புத்தாண்டை புது ஆண்டை!
இவ்வாறாக; ஆனாப் பட்ட அவுஸ்திரேலியா காட்டுத்தீயையே அழித்து விட்ட சர்வதேச சமூகம் இவ் இனத் தீயை அழிக்க முடியாமல் மூச்சு முட்டி நிற்கும் இவ் வேளை ஒரு நல்லிணக்கத்தை புரிந்துணர்வை ஒற்றுமையை கொண்டுவரும் இப் புத்தான்டானது நம் இரு இன மக்களும் சேர்ந்து கொண்டாடுவதற்காக தையிலல்ல சித்திரையிலே சிறப்பிப்பதே சாலச் சிறந்ததாகும் என்பது என் எண்ணம்.
அட எல்லாத்தையும் விட்டு விடுங்கள் சேரவே முடியாத இரு வேறுபட்ட இன மக்களை சேர்த்து வைக்கும் இப் புது வருடம் சித்திரையில் கொண்டாடினால் தான் என்ன? பொன் விளைந்தால் தான் என்ன? பொருள் விளைந்தால் தான் என்ன? ஒற்றுமையை விளைவிப்பது சித்திரைப் பெண் தானன்றோ?
என்ன நான் சொல்வது? இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே. இது சரியா இல்லை தவறா...? நீங்கள் தான் சொல்ல வேண்டும் நண்பர்களே!
ஞாயிறு, மார்ச் 29, 2009
உங்களுக்கு தெரியுமா அவர்கள் என்ன தான் பேசுகிறார்கள்???

"தத்தி தத்தி நடை பயின்று
கொஞ்சும் மொழி பேசி
வட்டமிட்டு வலம் வந்து
தன் அம்மாவின் கன்னத்தில்
'இச்' ஒன்று பதித்திடும்
எம் செல்லக் கண்மணிகளுக்கு..."
ஆமாங்க நான் இங்கு பேச வந்திருப்பது மழலைகளின் மொழி பற்றித் தானுங்க, அந்த ஆண்டவன் படைப்பில் உலகில் ஆயிரம் ஆயிரம் மனிதர்கள் அம் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு சிறப்பு. காதலர்களுக்கு காதல் சிறப்பு, மாணவர்களுக்கு கல்வி சிறப்பு, பெற்றொர்களுக்கு பிள்ளைகள் சிறப்பு, தொழிலாலர்களுக்கு உழைப்பு சிறப்பு. இவ்வாறுள்ள ஆயிரமாயிரம் சிற்ப்புக்களுள் நான் மிகவும் இனிமையானதாகவும் ரசிக்கத் தக்கதாகவும் கருதுவது எம் மழலை செல்வங்களின் கொஞ்சும் மொழியைத் தான்.
பொதுவாக சிறுவயதில் குழந்தைகள் எல்லோருமே அழகாகத் தான் இருப்பார்கள். அவர்களது குறும்புகள் சேஷ்டைகளிற்கு அளவிருக்காது. அவர்களது மழலை மொழி எங்களுக்கு புரியவே புரியாது, ஆனால் அம் மொழியை கேட்கும் போது எங்களுக்கு திகட்டவே திகட்டாது. அத்தனை ஆசையாக இருக்கும் அவர்களது மழலை மொழி. இதை பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?
பொதுவாக ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டால் அது ஆகாரம் சாப்பிடுவதற்கு "நண்ணா" வேனும் என்கிறது, இன்னொரு குழந்தை அதே ஆகாரத்தை "அவ்வா" என்கிறது. எப்படித் தான் கண்டுபிடிக்கிறார்களோ இப்படியொரு அற்புதமான மொழிப் படைப்பை! இதனால் தான் எந்த வள்ளுவனும் குழந்தை அகராதி என்றொண்டை உருவாக்காமலே போயிருப்பானோ?
கண்களால் சிரிப்பதும், வாண்டுத்தனமும், தத்தக்க பித்தக்க போன்ற அவர்களது மொழிப்படைப்பும் அப்பப்பா... அவர்களுக்கே உரிய வர்ணனைகள் அன்றோ?
நான் சில வேளைகளில் நினைப்பதுண்டு இந்த வாண்டுகளைப் பார்த்து எங்களது வாண்டுகள் அதாவது இலங்கை, இந்தியாக் கண்டங்களை சேர்ந்த வாண்டுகள் ண , ந என்றும் சீனா யப்பான் தேசங்களை சேர்ந்த வாண்டுகள் ங, ஞ என்றும் மேற்கு ஜரோப்பிய நாடுகளை சேர்ந்த வாண்டுகள் ஷா, ஷீ என்றும் கதைப்பார்களோ என்று , ஏனெனில் அத்தனை ரசிக்கத் தக்கவை இவர்களது மழலை மொழி. புதிது புதிதாக மொழிகளை உருவாக்க இவர்களால் மட்டும் தான் முடியுமோ என்னவோ?
எனது அக்காவிற்கு ஒரு மகள் இருக்கிறார். ஆள் படு சுட்டி. தேவதை வம்சம் என்றே அவளைப் பார்த்தால் கூறத் தோன்றும். அகன்ற பெரிய கண்களும் வட்ட முகமுமாய் எப்பொழுதும் தூக்கிக் கொஞ்சத் தோன்றும் அழகு உருவம் கொண்ட வாண்டு அவள். எங்கள் எல்லோரினதும் குட்டிப் பிசாசும் அவள் தான். அண்மையில் தான் தனது 2வது வருட பிறந்த தினத்தை(29.03.2009) கொண்டாடி மகிழ்ந்திருந்தாள். ஏன் இந்த குட்டியைப் பற்றி நான் குறிப்பிடுகிறேன் என்றால் இவள் தான் எனது அக்காவின் ஒரே ஒரு செல்ல வாரிசு. இவளை இவளது பெற்றோர் ஒரு பொக்கிஷம் போலவே பாதுகாக்கின்றனர். படு செல்லம் அவளுக்கு. அப்போ இக் குட்டியின் சேஷ்டைகள் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
நானும் அக்காவும் அடிக்கடி உரையாடும் சந்தர்பங்களில் தானும் ஆஜராகி விடுவா இந்த குட்டி வாண்டு. இந்த குட்டி வான்டுக்கு தன்னைத் தான் தன்னை மட்டும் தான் கவனிக்க வேண்டும். அதற்காக இந்த குட்டி வாண்டு செய்யும் அட்டகாசங்கள் ரசிக்கத் தக்கவை. இவளைப் பார்ப்பதிலே எங்களது பொழுதுகள் யாவும் கழிந்துவிடும். அவ்வாறான குறும்புக்காரி. இவரது மொழி ரசிக்கத் தக்கது. விளையாட்டு கரமானது. ஆனால் எங்களுக்கு அது புரியவே புரியாது. ஆனாலும் நாங்கள் தினம் தினம் அதை கேட்டு ரசிப்போம். எந்த தித்திப்பான இனிப்புப் பண்டமும் தோற்றுப் போய்விடும் இம் மழலைகளின் கொஞ்சும் மொழிக்கு முன்னால். அத்தனை அழகு. ஆனால் அம்மொழிகள் எமக்கு புரிவதில்லை.
பொதுவாக நாங்கள் எமக்குப் புரியாத எதையுமே பெரிதாக ரசிப்பதில்லை தானே? ஆனால் மழலை மொழி எமக்கு புரியாத புதிர் என்ற போதிலும் நாம் ரசிக்கின்றோம், சிரிக்கின்றோம், மன நிறைவும் அடைகின்றோம். அது ஏன்? அட உங்களுக்காவது தெரியுமா அவர்கள் என்ன தான் பேசிகிறார்கள் என்று...?
***Wish u a Happy Birthday
Sabia Kutty!***
புதன், மார்ச் 18, 2009
ஒரு தியாகியின் பதிவேடுகளிலிருந்து...

உறுதி எடுத்துக் கொள்வேன் மற்றவன்
நன்றாக வாழ வேண்டுமென்று
என் இரத்தத் துளிகளெல்லாம் இம் மண்ணில்
சிதறுண்ட போதும் நான் பேருவகை கொள்வேன்
என் இனத்தின் வியர்வைத் துளிகள் இங்கு பயிரிடப்பட வேண்டுமென்று
என் சந்ததியெல்லாம் வேரறுக்கப்படும் போதும்
நான் திடசங்கற்பம் பூணுவேன் வரும்
சந்ததியாவது தழைத்தோங்க வேண்டுமென்று
என் பாதைகளெங்கும் முட்கள் சூழ்ந்த போதும்
நான் மன உறுதி கொள்வேன் நாளை என்
மக்கள் நீங்கள் நலமுடனே வாழவேண்டுமென்று!
வியாழன், மார்ச் 12, 2009
சின்னப் பூவே மெல்லப் பேசு... (பாகம் 03)

இங்கோ தாரணியோ குமரனிடம் இருந்தோ தனது பெற்றோரிடமிருந்தோ எது வித தகவலும் இன்றி தனியே தவிக்கலானாள். அவளது நாட்கள் கண்ணீரில் கரையலாயின. எப்போதாவது பெற்றோரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வரும், அவர்கள் எடுத்து பேசுவார்கள் ஆனால் குமரன் பற்றிய தகவல்கள் அவர்களுக்குக் கூட தெரிந்திருக்கவில்லை. போரும் உக்கிரமடைய ஆரம்பிக்க தாரணியின் மன வேதனைகளும் உக்கிரமடைய ஆரம்பித்தன.
மாதங்கள் சில கடந்த நிலையில் கிளிநொச்சி மாநகரை கைப்பற்றிப் பிடித்த செய்தியை பட்டாசு முழக்கங்களுடன் அரசு அறிவித்தது. எங்கும் எதிலும் அரசின் வெற்றிச் செய்தியே எக்காள தொனியுடன் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இடம் பெயர்ந்த மக்களும் சிறிது சிறிதாக தங்கள் ஊர்களுக்கு திரும்பத் தொடங்கினர். குமரனின் குடும்பமும் தமது சொந்த ஊரை வந்தடைந்தனர். இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருந்த சமயம் அது. ஆனால் குமரனின் தந்தை அஞ்சவில்லை. அவருக்கு தன் மகனின் ஆயுளின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் விதி? குமரனின் உயிரற்ற உடலே அவருக்கு பரிசாக கிடைத்தது. குண்டுகள் துளைக்கப்பட்டு சிதைவடைந்த நிலையில் வெள்ளை துணிகளால் சுற்றப்பட்டு அவர் முன் பார்வைக்காக வைக்கப்பட்டது அவனது உயிரற்ற வெறும் உடலே. தன் மகன் மரணமான காட்சியை காண சகிக்காத அவர் வயிற்றிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தழுதார்.
குமரன்...,,, அவரது முதற் பிள்ளை. சிறு வயதுகளில் அவரது கரம் பிடித்து இவ் வயல் வெளியெங்கும் ஓடி மகிழ்ந்தவன். உயர்தர பரீட்சையில் அதி சிறந்த பெறுபேறுகளை பெற்று இவ் ஊரார் வாயாலே புகழுரை கேட்கப் பெற்றவன். தன் தம்பியின் நல் வாழ்வுக்காக தன் வாழ்வை பணயம் வைத்தவன். இன்று அவர்கள் முன்னிலையில் உயிரற்ற வெறும் உடலாய் கிடத்தப்பட்டிருந்தான். அழுதார்கள், புலம்பினார்கள். ஆனால் மாண்டவன் மீள்வானோ...? மீண்டெமைக் காண்பானோ...?
நாட்கள் கடந்திருந்த படியால் குண்டு துளைக்கப்பட்ட அவனது உடல் உடனடியாக புதைக்கவோ இல்லை எரிக்கவோ வேண்டிய கட்டாயம். அதிலும் அவன் அவ் இயக்கத்தின் உறுப்பினனும் ஆதலால் அவர்களிடம் அவனது உடல் தர அனுமதி மறுக்கப் பட்டது. சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அவனது உடல் தகனமும் செய்யப்பட்டது. அவனுடன் சேர்த்து நூற்றுக்கணக்கான உடல்களை தீயின் கோரப்பற்கள் விழுங்கிக் கொண்டன. இறுதியாக குமரனின் சாம்பல் அஸ்தியாக அவனது தகப்பனாரிடம் கையளிக்கப்பட்டது.
அஸ்தி கரைப்பதற்கு முன்னர் தன் வருங்கால மருமகள் என்று கனவு கண்டு வைத்திருந்தவளிடம் கனவு நொறுங்கி விட்ட செய்தியை கூற தொலைபேசி அழைப்பெடுத்தார் குமரனின் தந்தை. ஏற்கனவே பாதி உயிர் மாள மீதி உயிர் நோக வாழ்ந்து கொண்டிருந்த தாரணி அவனது மரணச் செய்தியினை கேட்ட கணம் தன் கையிலிருந்த தொலைபேசி தவற பூமி பிழந்து தன்னை உள்ளிழுப்பது போல் தோன்ற மயங்கிச் சரிந்தாள் நிலத்தில்.
அவ்வேளை அவளுடன் கூடவே இருந்த நண்பி அவளது நிலமையை புரிந்து கொண்டு அவளை தாங்கினாள், தேற்றினாள். அவளது குடும்பமே தாரணிக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறிக்கொண்டிருந்தனர். இருந்தும் தாரணி இன்றைக்கொரு நடைப்பிணம் போலவே வாழ்கிறாள். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக தொடர்ந்த அவர்களது காதல் பறித்துக் கொள்ளப்பட்ட செய்தியை அவளால் ஜீரணிக்க கூட முடியவில்லை .